Saturday, June 13, 2015

ஜூன் 24 முதல் பள்ளிகள் துவங்கும் நேரம்: காலை 9 மணி - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24-ந் தேதி முதல் காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 
முப்பருவக் கல்வி முறையால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை முப்பருவ பாடநூல் முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல், பள்ளிகளின் பாடவேளை சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பாடவேளை 45 நிமிடமாக இருந்ததை 40 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. பள்ளி துவங்கும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. 
இதுவரை 9.30 மணிக்கு துவங்கப்பட்ட பள்ளிகள் இனி காலை 9 மணிக்கே துவங்கும் என பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வரும் 24ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. 
ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை அன்று கடைசி ஒரு மணி நேரம் மாணவர்களின் பன்முக திறனை வெளிப்படுத்தும் வகையில் பேசுதல், ஆடுதல், நடித்தல், பாடு தல், நகைச்சுவை கூறுதல், மனக்கணக்கு கூறுதல், பொன்மொழி, பழமொழி கூறுதல் போன்ற நடவடிக்கையில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 காலை 9 மணிக்கு நடைபெறும் காலை வழிபாடு முறை வாரம் தோறும் திங்கள்கிழமை மட்டும் பொது காலை வழிபாட்டு கூட்டமும், மற்ற நாட்களில் அது வகுப்பறை நிகழ்வாகவும் அமைய வேண்டும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.