Tuesday, June 9, 2015

ஜூலை 1 முதல் 'ஹெல்மெட்' கட்டாயம்


தமிழகம் முழுவதும், இரு சக்கர வாகன ஓட்டிகள், ஜூலை 1 முதல், கண்டிப்பாக, 'ஹெல்மெட்' அணிய வேண்டும்; இல்லையென்றால், ஓட்டுனர் உரிமம் உட்பட ஆவணங்களை முடக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. புதிதாக, ஹெல்மெட் வாங்கி, ரசீதுடன் தாக்கல் செய்தால் தான், ஆவணங்களை திருப்பித் தர வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஹெல்மெட் அணியாததால், விலை மதிக்க முடியாத, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஹெல்மெட் அணிய வேண்டும் என, சட்டம் மற்றும் தீர்ப்புகள் இருந்தும், அந்த உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. சாலைகளில் பார்க்கும் போது, ஹெல்மெட் அணியாமல், வாகனங்களில் செல்வதை பார்க்க முடிகிறது.கடந்த ஆண்டில் மட்டும், தமிழகத்தில், 6,419 பேர், ஹெல்மெட் அணியாமல் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளனர். தினசரி என கணக்கிட்டால்,17 பேர் இறக்கின்றனர்.


  1. 'ஜூலை, 1ம் தேதி முதல், இரு சக்கர வாகன ஓட்டிகள், கண்டிப்பாக, ஹெல்மெட் அணிய வேண்டும்; இல்லையென்றால், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட, வாகன ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும்' என, வரும், 18ம் தேதிக்கு முன், பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

  2. இந்திய தர நிறுவனம் சான்றளித்த ஹெல்மெட்டை ரசீதுடன் தாக்கல் செய்தால், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் திருப்பித் தரப்படும்.

  3. இந்த உத்தரவை, தமிழக உள்துறை மற்றும் டி.ஜி.பி., நிறைவேற்ற வில்லை என்றால், வரும், 19ம் தேதி, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

  4. ஹெல்மெட் அணிந்து செல்கின்றனரா என்பதை கண்காணிக்க, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, உள்துறை மற்றும், டி.ஜி.பி.,க்கு உத்தரவிடப்படுகிறது.

  5. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு, 'நோட்டீஸ்' கொடுத்து, விசாரணைக்குப் பின், உரிமத்தை ரத்து செய்யலாம்.

  6. பக்கவாட்டில் பார்க்கும் வகையில், ஹெல்மெட் வடிவமைப்பது குறித்து, மத்திய அரசு கவனிக்க வேண்டும்.

  7. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, எவ்வளவு வழக்குகள் தாக்கல் ஆகிஉள்ளன என்ற விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

  8. ஹெல்மெட் கண்டிப்பாக அணிவதை கண்காணிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

  9. ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை விளக்கும் வகையில், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை, மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது