Showing posts with label THE LEGEND'S. Show all posts
Showing posts with label THE LEGEND'S. Show all posts

Thursday, December 24, 2015

தந்தை பெரியார் நினைவஞ்சலி

 
ஈ.வெ.இராமசாமி 
(17.09.1879 -  24.12.1973) 
 
"புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி"   - UNESCO


பகுத்தறிவு 

சாணியைக் கொண்டு போய் வைத்து, "இது ஒரு அருமையான உணவாகும்" என்று சொல்லிச் சாப்பிடச் சொன்னால் யாராவது சாப்பிடுவார்களா? பார்த்தவுடனேயே "இது சாணி, அசிங்கம்" என்று சொல்லிவிடுவார்களே! ஆனால் அதே சாணியைக் கொழுக்கட்டை பிடித்து இது சாமி என்று சொன்னால் தலையில் குட்டுப் போட்டுக் கொண்டு விழுந்து கும்பிடுகிறார்கள்.

ஏனென்றால், கடவுள் சங்கதி என்று சொன்னால் நம் மக்கள் அதைப் பற்றிச் சிந்திக்காமல் குருட்டுத்தனமாய் நம்ப வேண்டும். அது விசயத்தில் அறிவைச் செலுத்தக் கூடாது என்ற நிபந்தனை. இந்த முட்டாள் தனம் அதாவது அறிவுக்குப் பூரணச் சுதந்திர மற்ற அடிமைத் தன்மை ஒழிந்து பகுத்தறிவு வளர வேண்டும்.


கீழ் ஏழு லோகம் மேல் ஏழு லோகம் கண்டுபிடித்த நமக்கு, இமய மலையின் உயரம் ஏன் வெளிநாட்டான் கூற வேண்டியிருக்கிறது? என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா? 

நடராசர் நாட்டியத்திற்குத் தத்துவார்த்தம் கூறக் கூடிய அளவுக்கு அறிவு படைத்த நமக்கு இந்த ஒலி பெருக்கியை எப்படிச் செய்திருக்க வேண்டும் என்பது மட்டும் ஏன் தெரிந்து கொள்ள முடியவில்லை? என்று கவனிக்க வேண்டும். 

பார்வதியுடன் பரமசிவன் பேசிய ரகசியத்தைக்கூட அறிந்து கொள்ளும் சக்தி பெற்றுள்ள நமக்கு இவ்வளவு வெளிப்படையாக இருந்துவரும் இழிவு தெரியாமற்போனது ஏன் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். பொது அறிவு வளரவும் விசய ஞானம் உண்டாகவும் உங்கள் பகுத்தறிவை உபயோகிக்க முற்பட வேண்டும்.

பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள்,  கேள்வி மாத்திரத்தினாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. வெகு காலமாக நடந்து வருவதாக்த் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது; அனேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக் கூடாது; கடவுளாலோ மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பிவிடக் கூடாது; ஏதாவது ஒரு விசயம் நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திரச் சக்தி என்றோ நம்பிவிடக் கூடாது. எப்படிப்பட்ட விசயமானாலும் நடு நிலைமையில் இருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்க வேண்டும்.

மதம் 

ஓரிரு கோடி ரூபாய்ப் பணமும், ஓரிரு ஆயிரம் ஆண்களும்,   ஐந்து - ஆறு மொழிகளில் பத்திரிக்கைகளும் வைத்துக் கொண்டு,  ஒரு ஈன முகத்துக்கும் தெய்வப் பிறவித்தன்மை கற்பித்து, அற்புத அதிசயங்கள் செய்ததாகத் கதை கட்டி விட்டுப் பிரச்சாரம் செய்தால், ஒரு ஆண்டுக்குள்ளேயே பல லட்சக் கணக்கில் மக்கள் மண்டியிட்டுப் பின்பற்றும் புதிய மதத்தைக் காணலாம். எதிர்ப்பவரைத் தூக்கிலிடத்தக்க ஆதரவும் கிடைத்துவிடும். இதுதான் மதத்தின் லட்சணம்.

  • மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது. 
  • பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.

Sunday, October 11, 2015

மனோரமா எனும் மனோரஞ்சிதப்பூ


'ஆச்சி' மனோரமா

                                 26.05.1937 - 10.10.2015


தனது வாழ்நாளில்  தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், சிங்களம் ஆகிய 6 மொழிகளில் 1,300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.

1000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், ஏராளமான டி.வி தொடர்களிலும் நடித்தவர்.

300க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களைப் பாடியவர்.

தமிழ்த் திரையுலகில் 5 தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்.

தென்னிந்தியாவின் 5 முதல்வர்களுடன் நடித்த புகழ் பெற்றவர்.

 
ஆச்சிஎன்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்பட்ட மனோரமா இவ்வுலகை விட்டு மறைந்தார்.


5 முதல்வர்களுடன் 

தனது திரை வாழ்க்கையில் சி.என்.அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் இணைந்து மேடை நாடகங்களில் பங்கு பெற்றிருக்கிறார்.  

 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' , "வேலைக்காரி'  உள்ளிட்ட சில நாடகங்களில் அண்ணாவுடனும்,  'உதயசூரியன்'  நாடகத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு  கதாநாயகியாகவும் நடித்தார். ஆயிரம் நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

'அன்னமிட்டகை' உள்பட பல படங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடனும், 'லவகுசா' படத்தில் என்.டி.ராமராவுடனும் மனோரமா நடித்தார். இந்த ஐந்து பேரும் பிற்காலத்தில் முதல்-அமைச்சர்களாகப் பதவி வகித்தனர்.


விருதுகள் 

  • 1300 படங்களிற்கு மேல் நடித்து சாதனை புரிந்ததால் கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெற்றார். 

  • 1989 ம் ஆண்டு புதிய பாதை படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதினை பெற்றார்.

  • 2002 ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதினையும், தமிழக அரசின் கலைமாமணி விருதையும் மனோரமா பெற்றிருக்கிறார்.

  • மனோரமாவின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு "கௌரவ டாக்டர்' பட்டம் வழங்கியது.
பேபி சாந்தா 

மனோரமா 26.05.1937ல் தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில்  காசி கிழக்குடையார் - ராமாமிர்தம் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார்

மனோரமாவின் தந்தை, வெள்ளையர் ஆட்சி காலத்தில் சாலை காண்ட்ராக்டராக இருந்தார். அதனால் மிகவும் வசதியான குடும்பமாக இருந்தது.  இந்த நிலையில் மனோரமாவின் தாயார், தனது உடன் பிறந்த தங்கையையே கணவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தார்.

இதன் காரணமாக வீட்டு நிர்வாகம் மனோரமாவின் சித்தியின் கைக்கு மாறியது. அதன் பிறகு துன்புறுத்தல்களும் அதிகரிக்கத் தொடங்கியது.  இதனால் மனமுடைந்த மனோரமாவின் தாயார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது மனோரமாவுக்கு ஒரு வயது கூட ஆகவில்லை.

மனோரமாவின் அழுகுரலை கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது, மனோரமாவின் தாயார் தூக்கு மாட்டிக்கொண்டு, உயிர் போகும் நிலையில் துடித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்து பதறினார்கள். கயிற்றை அறுத்து அவரைக் காப்பாற்றினார்கள். அதன் பின்னர் மனோரமாவை அழைத்துக்கொண்டு, அவரது தாயார் ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகில் உள்ள பள்ளத்தூரில் குடியேறினார்.

இளமையில் வறுமை

மிகவும் வறுமையில் வாடி வந்த அவர்கள், பலகாரம் சுட்டு விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினார்கள். அப்போது இரண்டு வயது சிறுமியாக இருந்த மனோரமா, 'திருநீலகண்டர்' படத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய 'உன்னழகைக் காண இரு கண்கள் போதாதே' என்ற பாடலை பாடுவார்.

இதுபற்றி மனோரமாவின் நினைவுகள் :-

'எனக்கு இரண்டு வயது இருக்கும். மழலை தவழும் காலம். அந்தக் காலத்தில் பிரபல இசை மேதை பாடிய பாட்டை, ஓரளவு நயத்தோடு பாடினால் எந்த தாய்க்குதான் மகிழ்ச்சி பொங்காது!

தன்னுடைய கண்ணீர் வாழ்க்கையில் என் தாயார் முதன் முறையாக அனுபவித்த சந்தோஷ நிகழ்ச்சியே அதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன். அன்று முதல் என்னை பார்ப்பவர்கள் எல்லாம் தங்கள் அருகே அழைத்து வைத்துக்கொண்டு, 'பாப்பா! ஒரு பாட்டு பாடு' என்று சொல்வார்கள். நானும் பாடுவேன்.

படிப்படியாக இந்த 'பாடும் வித்தை' எப்படியோ என்னை விடாமல் ஒட்டிக்கொண்டது. மற்றவர்களுக்கு பாடிக்காட்டி, பாடிக்காட்டி அதுவே நல்ல பயிற்சியாகவும் அமைந்து விட்டது.'



அதன் பிறகு மனோரமாவின் பாடல் நிகழ்ச்சி, பல வீடுகளின் விசேஷங்களில் முக்கிய இடம் பிடித்தது.

பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, ஒரு முறை `பாருக்குள்ளே நல்ல நாடு' என்ற பாட்டை, 'மீரா' படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடும் 'காற்றினிலே வரும் கீதம்' என்ற பாட்டின் மெட்டில் பாடி ஆசிரியரிடம் பாராட்டுக்களை பெற்றார்.

அதன் பிறகு அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூட விழாக்கள், சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மனோரமாவை அழைத்துச்சென்று பாட வைத்தார்கள்.

பள்ளிக்கூடத்திற்கு சென்று திரும்பியதும், மனோரமா சினிமா 'டூரிங்' கொட்டகைக்கு சென்று பலகாரம் விற்பார்.

அங்கே பலகாரம் விற்பதுடன், எந்த காட்சியிலும், எந்த நேரமும் உள்ளே சென்று படம் பார்க்கும் இலவச அனுமதியும் கிடைத்தது. 'பாட்டுப் பாடுற பொண்ணு படத்தைப் பார்த்தா பாடக் கத்துக்கும்' என்று பிரியமாக விட்டு விடுவார்கள். அதனால் மனோரமாவும் இடை, இடையே தியேட்டருக்குள் சென்று பாடல் காட்சிகளை பார்த்து விட்டு வருவார்.

இப்படியே தியேட்டரில் படம் பார்த்தும், கிராமபோன் ரெக்கார்டுகளைக் கேட்டும் அவருடைய இசை ஞானம் வளர்ந்தது.


சில வருடங்களில் மனோரமாவின் தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் வேலை பார்க்க முடியாத சூழ்நிலை உருவானது. எனவே, பள்ளத்தூரில் ஒரு செட்டியார் வீட்டில் குழந்தையை கவனித்துக் கொள்ள மனோரமாவை அனுப்பி வைத்தார்.


மனோரமாவும், அவரது தாயாரும் வறுமையில் கஷ்டப்பட்டு வந்த நேரத்திலும், மனோரமாவின் இலவச பாட்டுக் கச்சேரி அனைத்து மங்கல நிகழ்ச்சிகளிலும் நடந்து கொண்டு இருந்தது.

மனோரமா உருவானார்


இந்த நிலையில் கோட்டையூரில் ஏகாதசி நாள் விழா நடந்தது. அன்றைய தினம் இரவு 'அந்தமான் காதலி' என்ற நாடகம் நடந்தது. அந்த நாடகத்தில் பெண் வேடம் போட்டவருக்கு பாட வராது. எனவே, அவருக்காக பாடவும், நாடகத்திற்கு இடையே நடனம் ஆடவும் ஒரு பெண்ணைத் தேடினார்கள். அந்த வாய்ப்பு மனோரமாவுக்கு கிடைத்தது. வறுமையுடன் போராடிக் கொண்டிருந்த மனோரமா, நாடக நடிகையானார்.


இந்த நாடகத்தில் பணிபுரிந்த டைரக்டர் சுப்பிரமணியன், உதவியாளர் திருவேங்கடம், ஆர்மோனிய வித்வான் தியாகராசன் ஆகியோர் வெகுவாக பாராட்டியதோடு, மனோரமா என்ற பெயரையும் வைத்தார்கள்.

கோட்டையூர் நாடகத்திற்கு எலக்ட்ரீசியனாக இருந்த பால்ராஜ் என்பவர், மனோரமாவின் திறமையை பார்த்து வியந்தார். புதுக்கோட்டையில் நடந்த 'விதியின் விசித்திரம்' என்ற நாடகத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க மனோரமாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார்.

வெறுமனே பாடியும், நடனமாடியும் வந்த மனோரமா, நாடக நடிகையானார். அதன் பிறகு அவர்கள் பசிக்கவலையும் மெல்ல, மெல்ல மறைந்தது.

அதன் பின்னர், எலக்ட்ரீசியன் பால்ராஜ் எழுதி தயாரித்த 'யார் மகன்?'  என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார். சித்தன்னவாசலில் நடந்த இந்த நாடகத்திற்கு டைரக்டர் 'வீணை' எஸ்.பாலசந்தர் தலைமை தாங்கினார்.

வஞ்சிக்கப்பட்ட  காதல் 

சபா நாடகக் குழுவில் மனோரமா நடித்துக்கொண்டு இருந்தபோது, அந்த சபாவில் முக்கிய பொறுப்பில் இருந்த எஸ்.எம்.ராமநாதன், மனோரமாவை காதலித்தார். அந்தக் காதலை மனோரமா ஏற்றுக் கொண்டார்.

மனோரமா - ராமநாதன் திருமணம், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்றது.


மனோரமா - ராமநாதன் குடும்ப வாழ்க்கை, ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே இருந்தது. கர்ப்பிணியான மனோரமா, 9 வது மாத இறுதியில், பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குச் சென்றார்.  குழந்தை பிறந்தது. அவர்தான் 'உதிரிப்பூக்கள்'  நடிகர் பூபதி. குழந்தை பிறந்த 15' வது நாளில் மனோரமா வீட்டுக்கு வந்தார் கணவர்  ராமநாதன்.

பச்சை உடம்போடு பலவீனமாக இருந்த மனோரமாவை மீண்டும் வந்து நாடகத்தில் நடிக்கும்படி வற்புறுத்தினார். கையில் பிஞ்சுக் குழந்தையுடன் இருந்த மனோரமா, 'குழந்தை பிறந்து 15 நாள்தான் ஆகிறது. இன்னும் கொஞ்ச காலம் போகட்டும்' என்றார்.

மனைவி, மகன் பற்றிய சிந்தனையே இல்லாமல், தனது நாடகக் கம்பெனி பற்றிய எண்ணம் மட்டுமே கொண்டிருந்த ராமநாதன், மனோரமா மீது கோபம் கொண்டார். அன்று திரும்பிச் சென்றவர் பிறகு திரும்பி வரவில்லை.  விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார் கணவர் ராமநாதன்.  மனோரமாவின் காதல் திருமணம் தோல்வியில் முடிந்தது. 

இதுபற்றி மனோரமா நினைவுகள் :-

'நான் கொண்டது உண்மையான காதல். அவர் மனமும் அவ்வாறே இருக்கும் என்று நம்பினேன். எங்கள் பிரிவு தற்காலிகமானது என்று நினைத்தேன். ஆனால் என் நம்பிக்கை வீணாயிற்று. இடி விழுந்தது போல, ஒரு நாள் அவரிடமிருந்து 'விவாகரத்து நோட்டீஸ்' வந்தது. அந்த நோட்டீஸ், எனது நம்பிக்கையையும், எதிர்காலம் பற்றிய கனவுகளையும் பொடிப்பொடியாக்கி விட்டது. சோகச் சுமையை தாங்கிப் பழக்கப்பட்ட நான், இதையும் தாங்கிக் கொண்டேன். அவருடைய காதல் நாடகத்தில் நான் ஒரு ஏமாந்த கதாப்பாத்திரம்!'

எதிர்நீச்சல்


ராம பாலகான சபாவில் இருந்து பிரிந்து வந்த நடிகர் முத்துராமன், 'குலதெய்வம்' ராஜகோபால் ஆகியோர், 'கலைமணி நாடக சபா' என்ற நாடகக் குழுவை ஆரம்பித்தனர். அந்த நாடகக் குழுவில் 'புயலுக்குப்பின்' என்ற நாடகத்தில் நடித்தார்

பிறகு, 'வைரம் நாடக சபா'வில் நடித்துக் கொண்டிருந்தபோது, எஸ்.எஸ்.ஆர் நாடக மன்றத்தின் 'மணிமகுடம்' நாடகத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்காக மனோரமா சென்னை வந்தார்.

அதையடுத்து கே.ஆர்.ராமசாமியின் நாடகங்களிலும், 'பிரண்டு' ராமசாமியின் நாடக மன்றத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

வெள்ளித்திரை பயணம்:- மாலையிட்ட மங்கை

நாடகத்தில் நடித்து வந்த மனோரமா 1958ல் வெளிவந்த கவிஞர் கண்ணதாசனின்  "மாலையிட்ட மங்கை'  என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார். முதன்முதலில் ஆச்சி கதாநாயகியாக   நடித்த படம் 'கொஞ்சும் குமரி'.


நாகேஷ் - மனோரமா 

1960- 69 களில் நாகேஷ் - மனோரமா ஜோடி நகைச்சுவையில் சிறந்து விளங்கியது. 1970 - 80 களில் சோ மற்றும் தேங்காய் சீனிவாசன் ஆகிய இருவருடன் இணைந்து நடித்த ஆச்சி நகைச்சுவையில் கொடி கட்டிப் பறந்தார்.

தில்லானா மோகனாம்பாள் - ஜில் ஜில் ரமாமணி 

"தில்லானா மோகனம்பாள்', மனோரமாவின் நடிப்பில் ஒரு மணி மகுடம். இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டிய பேரொளி பத்மினி ஆகியோருடன் மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் "ஜில் ஜில் ரமாமணி' என்ற கேரக்டரில் வரும் மனோரமாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. டி.எஸ்.பாலையா, சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு முன் நடிப்பதால் முதலில் இப்படத்தில் நடிப்பதற்கு மனோரமா தயங்கியுள்ளார். பின் இயக்குநர் தைரியம் ஊட்டி இவரை நடிக்க வைத்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாட்டியப்பேரொளி பத்மினி ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில் அவர்களை விடவும் அதிகமாக ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது மனோரமாவின் ஜில் ஜில் ரமாமணி வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்சாரம் அது மின்சாரம் - கண்ணம்மா 

குடும்ப சித்திரமாக வெளிவந்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கண்ணம்மா என்ற வேலைக்காரியாய் நடித்து அசத்தியிருப்பார். விசு, ரகுவரன், லட்சுமி ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்தில் மனோரமா பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க பாடுபடுவார். இந்தப் படத்தில் இவர் பேசிய "கம்முன்னு கிட" வசனம் மிகவும் புகழ்பெற்றது.


நடிகன் - பேபி

நடிகன் படத்தில் மனோரமா நடித்த பேபி அம்மா கதாபாத்திரம் இன்றளவும் மறக்க முடியாத ஒரு பாத்திரமாக திகழ்கிறது. சத்யராஜ், குஷ்பூ இருவருடனும் இணைந்து மனோரமா நடித்த நடிகன் திரைப்படம், மனோரமாவிற்கு மிகவும் பிடித்த ஒரு வேடம் என்று சமீபத்திய பேட்டியில் கூட அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்தில் 2 பெண்களின் கார்டியனாக நடித்த மனோரமா நகைச்சுவையில் பின்னியிருப்பார்.

சின்னக் கவுண்டர் - ஆத்தா 

சின்னக்கவுண்டர் படத்தில் ஆத்தாக் கிழவியாக நடித்து அசத்தியிருந்தார் மனோரமா. விஜயகாந்தின் அம்மாவாக இந்தப் படத்தில் நடித்த மனோரமா தெற்றுப் பல்கள் வைத்து நடித்திருந்தார். குறிப்பாக இந்தப் படத்தில் அவரின் சிரிப்பு குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயமாகத் திகழ்ந்தது. சின்னக்கவுண்டர் படமும் மனோரமாவிற்கு மிகவும் பிடித்த படமென்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு வாசல் 

தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. நிறைய படங்களில் அவர் நடித்திருந்தாலும் கிழக்கு வாசல் திரைப்படம் அவரின் அம்மா வேடத்தை நன்றாக பிரதிபலித்தது. மகன் கார்த்திக்காக குஷ்பூவை பெண் கேட்டு செல்லும் காட்சி மற்றும் குஷ்பூவின் வீட்டில் அவர் படும் அவமானங்கள் ஆகியவை ரசிகர்களையும் கண்ணீர் சிந்த வைத்தது.

சின்னத் தம்பி 

சின்னத் தம்பி படத்தில் பிரபுவின் அம்மாவாக நடிப்பில் கலக்கியிருப்பார்.இந்தப் படத்தில் மனோரமா ஏற்று நடித்த கண்ணம்மா கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஏராளமான படங்களில் மனோரமா கண்ணம்மா என்னும் பெயரிலேயே நடித்திருக்கிறார். இதைத்தவிர அண்ணாமலை, மே மாதம், பாட்டி சொல்லைத் தட்டாதே, சிங்காரவேலன், அருணாசலம், மறுமலர்ச்சி, புதிய பாதை, அபூர்வ சகோதரர்கள், மன்னன் போன்ற திரைப்படங்களும் ஆச்சியின் நடிப்பில் குறிப்பிடத் தகுந்த படங்கள் ஆகும்.

பாடகியாக 

சிறந்த நடிகை மட்டுமன்று நல்ல பாடகியாகவும் திகழ்ந்த ஆச்சி சுமார் 300 க்கும் அதிகமான பாடல்களை தனது திரையுலக வாழ்க்கையில் பாடியிருக்கிறார். 'மகளே உன் சமத்து' படத்தில் மனோரமா தனது சொந்தக் குரலில் 'தாத்தா தாத்தா பொடி கொடு' என்ற பாடலை பாடி இருக்கிறார். அதன் பின்னர் பொம்மலாட்டம் படத்தில் 'வா வாத்தியாரே ஊட்டாண்ட நீ வராங்கட்டி நான் உடமாட்டேன் ' என்ற பாடலையும், 'பாட்டிச் சொல்லைத் தட்டாதே' படத்தில் 'டில்லிக்கு ராஜா ஆனாலும் பாட்டிச் சொல்லைத் தட்டாதே' என்ற பாடலையும் பாடினார். 'மே மாதம்' படத்தில் `மெட்ராசை சுத்திப் பார்க்க போறேன்' என்ற பாடலையும் பாடி அசத்தியுள்ளார்.

கவிஞர் வைரமுத்துவின்  புகழஞ்சலி

மனோரமா ஒரு மனோரஞ்சிதப் பூ. மனோரஞ்சிதப் பூவுக்குத்தான் ஒரு வித்தியாசமான குணநலம் உண்டு. அதாவது, நாம் எந்த பூவை மனதில் நினைத்துக் கொண்டு மனோஞ்சித பூவை நுகர்கிறோமோ, அது அந்த பூவின் வாசனத்தை அப்படியே வெளிப்படுத்தும். அதேபோல், மனோரமா, நாம் ஒரு நகைச்சுவை நடிகையாக பார்த்தோமானால், அவர் அதைப் போலவே பளிச்சிடுவார். ஒரு குணச்சித்திர நடிகையாக பார்த்தால், அதைப்போல் அப்படியே பளிச்சிடுவார். இதுபோல், எந்த மாதிரி அவரைப் பார்த்தாலும், அந்த பாத்திரமாகவே அவர் காட்சியளிப்பார்.

Tuesday, September 15, 2015

அறிஞர் அண்ணா ( C. N. Annadurai )


(15.09.1909 - 03.02.1969)
 
செல்வம் சிலரிடம் சென்று குவிந்திடுவது வெள்ளத்துக்கு ஒப்பானது, 
அது கொண்டவனையும் அழித்துவிடும், 
சமூகத்தில் வலிவற்றவரையும் அழித்துவிடும்.
 பணம் பெட்டியிலே தூங்குகிறது...
 பணக்காரன் பட்டு மெத்தையில் தூங்குகிறான்...
 ஆண்டவன் சொர்க்கத்தில் தூங்குகிறான், 
இல்லாவிடில் ஏன் இத்தனை பிச்சைக்காரர்கள்?”

***

திருமண வீட்டிலே கொடுக்கின்ற சந்தனமானாலும், உடலிலே பூசி, அது நன்றாக உலர்ந்து, கொஞ்சம் அரிப்பு எடுக்க ஆரம்பித்தால் வீட்டிலே வந்து கழுவுகிறோமே, அது சந்தனம்-மணமிருக்கின்றது. அன்போடு கொடுத்தார்கள். உபசாரத்திற்காகக் கொடுத்தார்கள் என்றாலும் பூசி உலர்ந்து விட்டால் மறுபடியும் துடைத்து விடுகின்றோமே சந்தனத்தையே துடைக்கின்றோம் என்றால், வெள்ளைக்காரன் பூசிவைத்த அந்தச் சேற்றிலே இன்றைய தினம் நின்று கொண்டு “இது எவ்வளவு வாசனை தெரியுமா, இதிலேதான் எனக்குச் சமதர்ம மணம் கிடைக்கின்றது” என்று என்னுடைய கம்யூனிஸ்ட் நண்பர்கள் சொன்னால், நான் அவர்களுடைய நாசிக் குற்றத்தைப் பற்றிப் பரிதாபப்படுவதா, அல்லது அவர்களுக்குத் திடீரென்று சேற்றிலே தோன்றி விட்ட காதலைப்பற்றிப் பச்சாதாபப்படுவதா!

 ***
நாட்டு மக்களுக்கு என்னுடைய பாஷை புரிந்து விட்டது அதை இனி யாராலும் அணைக்க முடியாது.

நாட்டு
மக்கள் அந்தப் பகுதியிலே திரும்புகின்றார்கள் என்ற உடனே, கை தட்டி, கம்யூனிஸ்டுகள்அங்கே போகாதே அது ஆபத்தான பாதை, என் பின்னோடு வா, என் பின்னோடு வாஎன்று அழைக்கின்றார்கள். எங்கே ஐயா? என்று கேட்டால் டெல்லி வரையிலே போகலாம் என்கிறார்கள். நான் தமிழ்நாட்டு மக்களை, கொல்லிமலையைப் பாருங்கள், குடகு மலையைப் பாருங்கள், கொச்சி மலையைப் பாருங்கள், பாலாற்றைப் பாருங்கள், காவேரியைப் பாருங்கள், வைகையைப் பாருங்கள், தாமிரபணியைப் பாருங்கள் என்கிறேன். காங்கிரஸ்காரர்களே, தேவலோகத்திலே ஓடுகின்ற ஆற்றைப் பாருங்கள் என்கிறார்கள். கம்யூனிஸ்டுகளோ கங்கைக்கரைக்கே வா என்று அழைக்கின்றார்கள். காலிலே வலிவு இருக்கின்றதா? கருத்து அதற்கு இடம் தருமா?

ஆகையினால்தான்
பழந்தமிழகம் எப்படி டெல்லியின் பிடிக்குக் கட்டுப்படாமல், எந்த ஆதிகத்திற்கும் உட்படாமல், யாரையும் ஆதிக்கத்திற்குக் கொண்டு வராமல், மற்றவர்களை மதித்து மற்றவர்களாலே மதிக்கப்பட்டு, மற்றவர்களை நண்பர்களாகப் பெற்று, மற்றவர்களுக்கு அறிவை ஊட்டி, மற்றவர்களிடமிருந்து அறிவைப் பெற்றுக்கொண்டு, மற்றவர்களிடத்திலே வியாபாரம் நடத்த இடம் கொடுத்து, எப்படி உரிமை மிக்க நாடாக வாழ்ந்ததோ, அதைப்போல வாழ்வதற்கு வழி இருக்கிறது, வகை இருக்கிறது என்று திராவிட முன்னேற்றக் கழகம் சொல்கிறது.

 ***

Saturday, September 5, 2015

"கற்களை சிலைகளாக்கும் சிற்பிகள்" - அனைத்து நண்பர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்


“பெற்றோர்கள் குழந்தைகளை மட்டுமே உலகத்துக்குத் தருகி்ன்றனர்.
ஆனால் குருவோ உலகத்தையே குழந்தைகளுக்குத் தருகிறார்.“

  
 Dr. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
(05.09.1888 - 17.04.1975)
 
நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த மாமேதை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான இன்று(செப்டம்பர் 5) இந்தியா முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது

டாக்டர் ராதாகிருஷ்ணன் 05.09.1888ல்  திருத்தணியில் தெலுங்கு நியோகி பிராமணப்பிரிவு குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமி, தாயார் பெயர் சீதம்மா. இவர், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். ஆரம்பக் கல்வியை திருத்தணியில் பயின்றார். திருப்பதியில் உள்ள லுத்தரன் மிஷன் பள்ளியில் உயர்நிலைக்கல்வியை பயின்றார்.

வேலூர் ஊரிஸ் கல்லூரியில் B.A தத்துவம் சேர்ந்து பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரிக்கு மாறுதல் பெற்றார். சென்னை பல்கலைக் கழகத்தில் M.A. தத்துவவியல் முடித்த பின்பு, 1909ல்  சென்னை மாநிலக் கல்லூரியில் உதவி விரிவுரையாளராக சேர்ந்தார்.

1914ல் கணித மேதை டாக்டர் ஸ்ரீனிவாச ராமானுஜம், லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு செல்வதற்கு முன் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்து ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.

1918ல் மைசூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.

1921ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மதிப்புமிக்க மன்னர் V ஜார்ஜ் பெயரால் வழங்கப்படும் தத்துவவியல் பேராசிரியர் பதவியை பெற்றார்.

1931ல் ஆந்திர பல்கலைக்கழக துணைவேந்தர் ஆனார். 
1939ல் மதன் மோகன் மாளவியா நிறுவிய பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக பொறுப்பேற்றார்.

சுதந்திரம் பெற்ற பிறகு 1948ல் பல்கலைக்கழக கல்விக் குழுவின்(University Education Commission ) தலைவர் ஆனார்.

1949ல் சோவியத் யூனியனுக்கான தூதுவராக நியமிக்கப் பட்டார்.

1952ல் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்
.
1954ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இதே ஆண்டில் அமெரிக்காவில் இவரது "The Philosophy of Dr. Sarvepalli Radhakrishnan" புத்தகம் வெளியிடப் பட்டது.
(Dr.Radhakrishnan and American President John F.Kennedy)

1962ல் இந்தியாவின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவி வகிக்க அ வருக்கு அழைப்பு விடப்பட்டும் அவர் அதை விரும்பவில்லை.



அவரது 79வது வயதில் 1967ல் அவர் சென்னை திரும்பினார். தனது இறுதி நாள்வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது "Girija" இல்லத்தில் மகிழ்வோடு இருந்தார்.

1975 ஏப்ரல் 17ம் நாள்  அவர் இம்மண்ணுலகை விட்டு மறந்தார்.

சிறந்த ஆசிரியர்
 
அவர் ஒரு ஆசிரியராக இருந்தவர். சிறந்த தத்துவமேதை என்று பெயர் பெற்றவர். நல்ல கல்வியாளர். ஒருமுறை அவரது மாணவர்கள் சிலர், அவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார், "எனது பிறந்தநாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதைவிட அதையே ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால், நான் பெருமையாக உணர்வேன்" என்றார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

பணியை போற்றியவர் 
 
தனது வாழ்வில் ஆசிரியர் பணியை பெருமையாய் கருதியவர் ராதாகிருஷ்ணன். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர். பெருமையை சேர்த்தவர். ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயணப்பட முடியும் என்பதற்கு அவரே நேரடி செயல் விளக்கம். பல ஆசிரியர்களுக்கு முன்னுதாரணம்.

ஆசிரியர்கள், சமூகத்தின் அடிப்படை:
 
ஒரு சமூகம் அதி உன்னத நிலை அடைந்து இருந்தால் நிச்சயமாக அதன் பின்னால் அற்புதமான ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால் ஆசிரியர் சமூகம் தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம்.

ஆசிரியர்கள், சமூக சிற்பிகள்: 
 
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஊக்கத்தினையும், தன்னம்பிக்கை, நன்னெறி,ஒழுக்கம், அறிவுத்தேடல் ஆகியவற்றை ஊட்ட வேண்டும். ஒரு குழந்தை விரும்பா விட்டாலும் அதன் தாய் எப்படி உணவை வாயில் அடைத்து ஊட்டுகின்றாரோ அதை போல எப்படிப் பட்ட மாணவர்களையும் கைவிடாது ஆசிரியர்கள் இதை செய்யவேண்டும். இதை சரியாக செய்யும்போதுதான், அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை அடைந்ததாக அர்த்தம்.

கல்போல, களிமண் போல  பக்குவம் இல்லாமல் தன்னிடம் வரும் மாணவர்களை , சிலைகளாகவும், சிற்பங்களாகவும்  செதுக்கிடும் ஆசிரியப் பெருமக்களுக்கு இனிய ஆசிரியர்தின நல் வாழ்த்துக்கள்!