Thursday, December 24, 2015

தந்தை பெரியார் நினைவஞ்சலி

 
ஈ.வெ.இராமசாமி 
(17.09.1879 -  24.12.1973) 
 
"புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி"   - UNESCO


பகுத்தறிவு 

சாணியைக் கொண்டு போய் வைத்து, "இது ஒரு அருமையான உணவாகும்" என்று சொல்லிச் சாப்பிடச் சொன்னால் யாராவது சாப்பிடுவார்களா? பார்த்தவுடனேயே "இது சாணி, அசிங்கம்" என்று சொல்லிவிடுவார்களே! ஆனால் அதே சாணியைக் கொழுக்கட்டை பிடித்து இது சாமி என்று சொன்னால் தலையில் குட்டுப் போட்டுக் கொண்டு விழுந்து கும்பிடுகிறார்கள்.

ஏனென்றால், கடவுள் சங்கதி என்று சொன்னால் நம் மக்கள் அதைப் பற்றிச் சிந்திக்காமல் குருட்டுத்தனமாய் நம்ப வேண்டும். அது விசயத்தில் அறிவைச் செலுத்தக் கூடாது என்ற நிபந்தனை. இந்த முட்டாள் தனம் அதாவது அறிவுக்குப் பூரணச் சுதந்திர மற்ற அடிமைத் தன்மை ஒழிந்து பகுத்தறிவு வளர வேண்டும்.


கீழ் ஏழு லோகம் மேல் ஏழு லோகம் கண்டுபிடித்த நமக்கு, இமய மலையின் உயரம் ஏன் வெளிநாட்டான் கூற வேண்டியிருக்கிறது? என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டாமா? 

நடராசர் நாட்டியத்திற்குத் தத்துவார்த்தம் கூறக் கூடிய அளவுக்கு அறிவு படைத்த நமக்கு இந்த ஒலி பெருக்கியை எப்படிச் செய்திருக்க வேண்டும் என்பது மட்டும் ஏன் தெரிந்து கொள்ள முடியவில்லை? என்று கவனிக்க வேண்டும். 

பார்வதியுடன் பரமசிவன் பேசிய ரகசியத்தைக்கூட அறிந்து கொள்ளும் சக்தி பெற்றுள்ள நமக்கு இவ்வளவு வெளிப்படையாக இருந்துவரும் இழிவு தெரியாமற்போனது ஏன் என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். பொது அறிவு வளரவும் விசய ஞானம் உண்டாகவும் உங்கள் பகுத்தறிவை உபயோகிக்க முற்பட வேண்டும்.

பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள்,  கேள்வி மாத்திரத்தினாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. வெகு காலமாக நடந்து வருவதாக்த் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது; அனேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக் கூடாது; கடவுளாலோ மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலேயே நம்பிவிடக் கூடாது; ஏதாவது ஒரு விசயம் நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ மந்திரச் சக்தி என்றோ நம்பிவிடக் கூடாது. எப்படிப்பட்ட விசயமானாலும் நடு நிலைமையில் இருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்க வேண்டும்.

மதம் 

ஓரிரு கோடி ரூபாய்ப் பணமும், ஓரிரு ஆயிரம் ஆண்களும்,   ஐந்து - ஆறு மொழிகளில் பத்திரிக்கைகளும் வைத்துக் கொண்டு,  ஒரு ஈன முகத்துக்கும் தெய்வப் பிறவித்தன்மை கற்பித்து, அற்புத அதிசயங்கள் செய்ததாகத் கதை கட்டி விட்டுப் பிரச்சாரம் செய்தால், ஒரு ஆண்டுக்குள்ளேயே பல லட்சக் கணக்கில் மக்கள் மண்டியிட்டுப் பின்பற்றும் புதிய மதத்தைக் காணலாம். எதிர்ப்பவரைத் தூக்கிலிடத்தக்க ஆதரவும் கிடைத்துவிடும். இதுதான் மதத்தின் லட்சணம்.

  • மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது. 
  • பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.