Tuesday, September 15, 2015

அறிஞர் அண்ணா ( C. N. Annadurai )


(15.09.1909 - 03.02.1969)
 
செல்வம் சிலரிடம் சென்று குவிந்திடுவது வெள்ளத்துக்கு ஒப்பானது, 
அது கொண்டவனையும் அழித்துவிடும், 
சமூகத்தில் வலிவற்றவரையும் அழித்துவிடும்.
 பணம் பெட்டியிலே தூங்குகிறது...
 பணக்காரன் பட்டு மெத்தையில் தூங்குகிறான்...
 ஆண்டவன் சொர்க்கத்தில் தூங்குகிறான், 
இல்லாவிடில் ஏன் இத்தனை பிச்சைக்காரர்கள்?”

***

திருமண வீட்டிலே கொடுக்கின்ற சந்தனமானாலும், உடலிலே பூசி, அது நன்றாக உலர்ந்து, கொஞ்சம் அரிப்பு எடுக்க ஆரம்பித்தால் வீட்டிலே வந்து கழுவுகிறோமே, அது சந்தனம்-மணமிருக்கின்றது. அன்போடு கொடுத்தார்கள். உபசாரத்திற்காகக் கொடுத்தார்கள் என்றாலும் பூசி உலர்ந்து விட்டால் மறுபடியும் துடைத்து விடுகின்றோமே சந்தனத்தையே துடைக்கின்றோம் என்றால், வெள்ளைக்காரன் பூசிவைத்த அந்தச் சேற்றிலே இன்றைய தினம் நின்று கொண்டு “இது எவ்வளவு வாசனை தெரியுமா, இதிலேதான் எனக்குச் சமதர்ம மணம் கிடைக்கின்றது” என்று என்னுடைய கம்யூனிஸ்ட் நண்பர்கள் சொன்னால், நான் அவர்களுடைய நாசிக் குற்றத்தைப் பற்றிப் பரிதாபப்படுவதா, அல்லது அவர்களுக்குத் திடீரென்று சேற்றிலே தோன்றி விட்ட காதலைப்பற்றிப் பச்சாதாபப்படுவதா!

 ***
நாட்டு மக்களுக்கு என்னுடைய பாஷை புரிந்து விட்டது அதை இனி யாராலும் அணைக்க முடியாது.

நாட்டு
மக்கள் அந்தப் பகுதியிலே திரும்புகின்றார்கள் என்ற உடனே, கை தட்டி, கம்யூனிஸ்டுகள்அங்கே போகாதே அது ஆபத்தான பாதை, என் பின்னோடு வா, என் பின்னோடு வாஎன்று அழைக்கின்றார்கள். எங்கே ஐயா? என்று கேட்டால் டெல்லி வரையிலே போகலாம் என்கிறார்கள். நான் தமிழ்நாட்டு மக்களை, கொல்லிமலையைப் பாருங்கள், குடகு மலையைப் பாருங்கள், கொச்சி மலையைப் பாருங்கள், பாலாற்றைப் பாருங்கள், காவேரியைப் பாருங்கள், வைகையைப் பாருங்கள், தாமிரபணியைப் பாருங்கள் என்கிறேன். காங்கிரஸ்காரர்களே, தேவலோகத்திலே ஓடுகின்ற ஆற்றைப் பாருங்கள் என்கிறார்கள். கம்யூனிஸ்டுகளோ கங்கைக்கரைக்கே வா என்று அழைக்கின்றார்கள். காலிலே வலிவு இருக்கின்றதா? கருத்து அதற்கு இடம் தருமா?

ஆகையினால்தான்
பழந்தமிழகம் எப்படி டெல்லியின் பிடிக்குக் கட்டுப்படாமல், எந்த ஆதிகத்திற்கும் உட்படாமல், யாரையும் ஆதிக்கத்திற்குக் கொண்டு வராமல், மற்றவர்களை மதித்து மற்றவர்களாலே மதிக்கப்பட்டு, மற்றவர்களை நண்பர்களாகப் பெற்று, மற்றவர்களுக்கு அறிவை ஊட்டி, மற்றவர்களிடமிருந்து அறிவைப் பெற்றுக்கொண்டு, மற்றவர்களிடத்திலே வியாபாரம் நடத்த இடம் கொடுத்து, எப்படி உரிமை மிக்க நாடாக வாழ்ந்ததோ, அதைப்போல வாழ்வதற்கு வழி இருக்கிறது, வகை இருக்கிறது என்று திராவிட முன்னேற்றக் கழகம் சொல்கிறது.

 ***