Sunday, September 27, 2015

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி: வால்பாறை To சாலக்குடி (பாகுபலி WaterFallsக்கு போலாம் ரைட்)

உங்களை நீங்கள் மறந்திருப்பீர்கள். நீங்கள் மறந்த, எங்கோ நீங்கள் தொலைத்த காதல் மீண்டும் உங்கள் மனம் முழுவதும் பரவும். நீங்கள் குழந்தைகள் ஆவீர்கள். நீங்கள் துள்ளி விளையாடுவீர்கள். குறைந்த பட்சம் உங்கள் மனம் மட்டுமாவது.

உங்கள் பரபரப்பு அடங்கி இருக்கும். உங்கள் கவலைகள் மறக்கப்படும். உங்கள் தன்னம்பிக்கை புதிய நிலங்களில் துளிர்க்கும் தைரியம் பெறும்.

இந்த இடத்தை உங்கள் வசப்படுத்த முடியுமா என்று கூட யோசிப்பீர்கள். இரவே இல்லாத நீண்ட பகல்பொழுது கிடைக்காதா என மனது ஏங்கும். மணித்துளிகள் நிமிடங்களில் கடக்கும். அழகின் பிரம்மாண்டத்தில் விதிர்விதிர்த்து மூச்சடைத்து நிற்பீர்கள்.

மெல்ல மெல்ல நெருங்கி, சட்டென சரிந்து,வேகமாக கீழிறங்கி, விட்டுவிட்டு வெகுதூரம் சிரித்துக்கொண்டே சென்றோடும் காதலியின் பிரிவினை போல ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டே இருப்பீர்கள்.
விட்டு வெளியேறும்போது பிரிந்து செல்லும் காதலர்களைப் போல உணர்வீர்கள்.

இதெல்லாம் எங்கே? 

புன்னகை மன்னன் படத்தில் வரும் நீர்வீழ்ச்சி, பையா படத்தில் "அடடா மழைடா" பாடலில் தமன்னா ஆடும் நீர்வீழ்ச்சி, ராவணன் படத்தில்  "உசுரே போகுதே" பாடல் உட்பட பெரும்பாலான காட்சிகள், அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தில் அனுஷ்கா'வைக் கடத்தி வைத்திருக்கும் காடு, பாகுபலி திரைப்படத்தில் உள்ளதைக் கொள்ளை கொள்ளும்  நீர்வீழ்ச்சி என இன்னும் பல திரைப்படங்களில் நாம் கண்டு களிக்கும்  அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி தான்  அது.

தமிழகத்தில் வால்பாறையிலிருந்து சோலையார் அணை வழியாக அதிரப்பள்ளி செல்லலாம்.   ஆசியாவிலேயே மிக நீளமான சோலையார்  அணை   வால்பாறையிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது. 
 
7 கி.மீ நீளமுள்ள இந்த அணை சாலக்குடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. அணையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ஆற்று பள்ளத்தாக்கு ரம்மியமானது. இங்கு மீன் சாப்பாடு பிரசித்தம். கேரளாவின் சாலக்குடி செல்லும் சாலையில் வழச்சல் மற்றும் அதிரப்பள்ளி(65KM) நீர்வீழ்ச்சிகள் அருகருகே 4 கி.மீ இடைவெளியில்  உள்ளன .  

இதேபோல கேரளாவின் திருச்சூரில் இருந்து சாலக்குடி வழியாகவும் அதிரப்பள்ளி(Salakudi to Athirappalli 30 Km) நீர்வீழ்ச்சி அடையலாம். NH47ல் திருச்சூரிலிருந்து சாலக்குடி செல்ல முடியும். சாலக்குடியிலிருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் சாலை ரம்மியமானது. 


இந்த வழியே செல்லும் போது  Dream World Water Theme Park, Silver Storm Water Theme Park  ஆகியவற்றை பார்க்க இயலும். அமைதியான சாலக்குடி ஆறு எதிர்திசையில் சிரித்துக்கொண்டே பயணிக்கும்.

பொதுவாக இங்கு செல்ல செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பொருத்தமான காலம். எங்கு பார்த்தாலும் பசுமை, அமைதி, அழகழகாய் மேகங்கள், ஆர்பரித்துக் கொட்டும் தண்ணீர், மேலெழும் வெண்பனிப் புகை.. 

சோலையார் அணையைக் கடந்து மலக்கப்பாறை செக்போஸ்ட் வழியாக சோலையார் ரிசர்வ் காடுகள் வழியே செல்லும் பாதை ரம்மியமானது.

வழச்சல் நீர்வீழ்ச்சியை அடைவதற்கு முன்பாக மற்றொரு செக்போஸ்ட் உள்ளது.  வழச்சல் நீர்வீழ்ச்சி  அதிரப்பள்ளிக்கு  5 கி.மீ  முன்பாகவே  உள்ளது.

 பசுமையான காடுகளில் ஊடாக அழகாக செல்லும் சாலை. சாலைகள் எங்கும் வானரங்களின் கொண்டாட்டங்கள். இங்கு நீங்கள் செக்போஸ்ட் சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல முடியும்.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை அடைய முதலில் அனுமதிச் சீட்டு பெறவேண்டும். 

இந்த அனுமதிச் சீட்டை அதிரப்பள்ளிக்கு முன்பு 5 கி.மீ தொலைவில் உள்ள வழச்சல் நீர்வீழ்ச்சிக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இரு நீர்வீழ்ச்சிகளும் சோலையாறு வனச்சரகத்திற்கு உட்பட்டது.

இங்கு உங்கள் கவலைகள், மன அழுத்தங்கள் அனைத்தையும் நீங்கள் மறந்து விடுவீர்கள்.

மன அமைதியையும், அளவில்லாத தனிமைப் பேரானந்தத்தையும் அடைவீர்கள்.

வார்த்தைகளால் விவரிக்க முடியாத அழகை நீங்கள் உணர்வீர்கள். 

 ஏன்? சொல்லப் போனால் நீங்கள் அந்த சூழலையும், அருவியின் அழகையும் ஒரு பெண்ணாக நினைத்து உங்கள் காதலைக் கூட சொல்வீர்கள்.

 இதுக்கு மேலயும் நீங்க யோசிக்கவா போறீங்க? சான்சே இல்ல. எப்போ கெளம்புறீங்க? போயிட்டு திரும்ப வரும்போது நீங்க எடுத்த photos எல்லாம் நம்ம மெயில்'கு அனுப்புங்க.