Wednesday, April 15, 2015

மாணவர்களின் ‘பஸ் பாஸ்’களில் அடுத்த ஆண்டு முதல் ரத்தப் பிரிவு இடம்பெறும்.

BUS PASS 

மாணவர்களின் ’பஸ் பாஸ்’களில் ரத்தப் பிரிவைக் குறிப்பிடும் திட்டம், வரும் கல்வியாண்டு முதல் அறிமுகமாகிறது என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

முதற்கட்டமாக, அரசு தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை, மாணவ, மாணவியரின் ரத்தப் பிரிவைக் கண்டறிந்து, அதை, EMIS, I.D.கார்டு, பஸ் பாஸ்  போன்றவற்றில் குறிப்பிட  முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் தலைமையில் நடைபெறும் கூட்டங்கள் மூலம் உத்தரவிடப் படுகிறது.

வரும் கல்வியாண்டில்  ’பஸ் பாஸ்’  கோரும்  மாணவர்களின்  பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், பஸ்சில் ஏறும், இறங்கும் இடம், அந்தப் பாதையில் வரும் பஸ்களின் தடம் எண் போன்ற விவரங்களை, ஆன்-லைன் பதிவேட்டில் (EMIS) குறிப்பிட உத்தரவிடப்பட்டுள்ளது. 

இத்துடன் மாணவ, மாணவியரை பள்ளிக்கு வரவழைத்து, ரத்தப் பரிசோதனை நடத்தி, அவர்களின் ரத்தப் பிரிவைக் கண்டறிந்து, அதையும் ஆன்-லைனில் மாணவர் விவரங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தப் பணிகளை, வரும், 28ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

ரத்தப் பிரிவுடன் கூடிய விவரங்களை போக்குவரத்துத் துறைக்கு அனுப்பி, பள்ளி திறக்கும் ஜூன், 1ம் தேதி, மாணவ, மாணவியரின் புகைப்படத்துடன் கூடிய, ’பஸ் பாஸ்’ அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.