Wednesday, April 22, 2015

கல்லூரிகள், பள்ளிகளில் ஜூன் 21ல் சர்வதேச யோகா தினம் கொண்டாட உத்தரவு

கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில், ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா தினத்தை கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2014 செப்., 27ம் தேதி, ஐ.நா., பொது சபை கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியபோது, சர்வதேச யோகா தினத்தை, ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி கொண்டாட கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று, ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா., அறிவித்துள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகப் பரிந்துரையில், UGC மற்றும் CBSE ஆகியவை, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளன.

அதில் "ஜூன் 21ம் தேதி, கல்வி நிறுவனங்களில் சர்வதேச யோகா தினம் கொண்டாட வேண்டும். ஐ.நா., சபை அறிவிப்புக்குப் பின் முதல் முறையாக, யோகா தினம் கொண்டாட உள்ளதால், கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். யோகா குறித்த பயிற்சிகள், போட்டிகள், விழிப்புணர்வுப் படங்கள், வீடியோ கிளிப்பிங்ஸ் பாடல்கள் போன்றவற்றை உருவாக்கலாம். இதற்கான ஆயத்தப் பணிகளை தற்போதிருந்தே துவங்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்"  என  கூறப்பட்டுள்ளது.