Friday, April 17, 2015

காற்றினால் இயங்கும் 4 சக்கர வாகனம் கண்டுபிடித்த மாணவர்கள்


திண்டுக்கல்: திண்டுக்கல் PSNA இன்ஜி., கல்லூரி மாணவர்கள், காற்றினால் இயங்கும் மாசு ஏற்படுத்தாத நான்கு சக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளனர்.

மெக்கானிக்கல் பிரிவு இறுதியாண்டு மாணவர்கள் ரெக்ஸ்ஆரோ, சந்தோஷ் தங்கராஜ், ரிஷிமணிகண்டன், சதீஷ்பாண்டியராஜா, மிதிவண்டியின் ப்ரீ வீல் தத்துவத்தில், காற்றால் இயக்கப்படும் நான்கு சக்கர (மாதிரி) வாகனத்தை தயாரித்துள்ளனர். துறை தலைவர் வாசுதேவன், பேராசிரியர் கண்ணன் உதவியுடன் ரூ.14,500ல் வாகனம் தயாரிக்கப்பட்டது.

பேராசிரியர் கண்ணன் கூறியதாவது: காற்றில் இயங்குவதால் மாசு ஏற்படாது. சைலன்சர் இதில் இல்லை. பத்து பார் அளவுள்ள காற்றை டேங்கில் அடைத்து, ஏர் ரெகுலேட்டருக்கு அனுப்பிவைக்கப்படும். பின், செலிநாய்டு வால்வு மூலம் இரண்டு ஏர் சிலிண்டர்களுக்கு ஒன்றன் பின் ஒன்றாக காற்று செலுத்தப்படும் அளவில் அமைக்கப்பட்டுள்ளது.  இரண்டு சிலிண்டர் மூலம், திறன் பெறப்பட்டு ப்ரீ வீலுக்கு சக்தி கடத்தப்பட்டு வாகனம் நகரும். மணிக்கு 17 கி.மீ., செல்லும். 60 மீட்டரை 10 நொடிகளில் கடக்கும். வேகத்தை கட்டுப்படுத்த, டைமிங் கண்ட்ரோல் போர்டு அமைத்திருக்கிறார்கள். இதேபோல் காற்று மறுபடியும் டேங்கிற்கு கடத்தப்படுகிறது. தொடர்ந்து காற்று வெளியேறாமல் திறன் பெறும்படி அமைக்கப்பட்டுள்ளது. இது, மாதிரி கண்டுபிடிப்புத்தான். தற்போது, கல்லூரி வளாகத்தில் பொருட்களை கொண்டுசெல்ல பயன்படுத்த உள்ளோம். அடுத்தகட்ட ஆய்வில், பெரியளவில் காற்றினால் இயங்கும் வாகனம் உருவாக்குவோம், என்றார்.