Saturday, April 11, 2015

'ஆசிட்' தாக்குதலுக்கு இலக்காகும் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக மேற்கொள்ள வேண்டும் - சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவு



நெஞ்சில் சிறிதும் ஈரமற்ற எண்ணற்ற மனித மிருகங்களையும் தான் நாம் கடந்து போகிறோம். 

சிலர் 15 வயது தாண்டியவுடனே, தலைமுடியை கண்டபடி செதுக்கி இருப்பார்கள். கழுத்தில் பிளேடு போட்ட சங்கிலியை போட்டிருப்பார்கள். கைகளில் தனது ஜாதி சார்ந்த ரப்பர் வளையம் இருக்கும்.  Yamaha, Pulsar, Apache போன்ற ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்குகளில் நண்பர்களுடன் சாலைகளை அலற விடுவார்கள். Accident ஆகி அடிபட்டாலும் கூட மீண்டும் அப்படித்  தான் இருப்பார்கள். பஸ் ஸ்டாண்ட், பெண்கள் கல்லூரி வாசல், பெண்கள் பள்ளிக்கூட வாசல், டியூஷன் வாசல் என எல்லா வாசல்களிலும் நின்று பெண்களை தொந்தரவு செய்வார்கள்.

வேறு சிலர் அதிக பட்சம் 10ம் வகுப்பிற்குள் படித்திருப்பார்கள். தலையை விட முடி அதிகமாக இருக்கும்.  பின்பக்கம் நீளமாக வால் ஒன்றை வைத்திருப்பார்கள். கிருதா 'வை கத்தி போன்று டிசைன் செய்திருப்பார்கள். அழுக்கு டி-சர்ட், ஜீன்ஸ் இருக்கலாம். எந்த பழக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம். எப்போதாவது வேலை இருக்கலாம். ஆனால் பெரும்பாலான வேலை  பஸ் ஸ்டாண்ட், பெண்கள் பள்ளி, பெண்கள் கல்லூரி, கார்மெண்ட்ஸ் வாசல்கள் இதர சில இடங்கள். இவர்கள் திருமணமான பெண்களையும் கூட தங்கள் கணக்கில் வைத்திருப்பார்கள். 

இவர்கள் இருவரிடமும் நவீன செல்போன்கள் இருக்கும். பாக்கெட்'ல் 10 ரூபாய் கூட இருக்காது.

இப்படி இந்த இருவருக்கும் ஒரே நோக்கம் என்னவென்றால், அழகான பெண்களை(திருமணம் ஆகி இருந்தாலும் கூட) பின்தொடர்வது, அப்பெண்கள் வழக்கமாக வந்தே தீர வேண்டிய இடங்களில் "Wait" செய்வது, மோசமான சிக்னல்கள் கொடுப்பது, பஸ்களில் தவறாமல் தினமும் வந்து அருகில் நின்றபடி நண்பர்களுடன் பேசுவது, கண்களில் காமத்தை வழிய விடுவது போன்றவைதான்.

சரி இவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்? காதலா? அறிவியலின் படி "காதல்" என்பதே ஒரு பொய்.  அது அவர்களுக்கும் தெரியும். படிப்போ, வேலை ஆகியவற்றில்  திறமையோ இல்லாத இவர்களுக்கு  ஒரு அழகான பெண் வேண்டும். அதுவும் நல்ல வசதியான வீட்டு பெண்களாகவோ அல்லது  நன்கு படித்து வேலைக்கு போகக் கூடிய பெண்களாகவோ இருந்தால் கூடுதல் அதிர்ஷ்டம். 

இதெல்லாம் இதை படிக்கும் நமக்கு முன்பே தெரியுமா? ஏன் தெரியாது? இப்படிப் பட்ட Character கொண்ட ஹீரோக்களின் படங்கள் தானே இங்கு Block Buster  அடிக்கிறது. நாம் தானே அவைகளை வெற்றி பெற வைக்கிறோம். 

சரி அதனால் என்ன?  இப்படி சமூகத்தில் பல இடங்களிலும், பலராலும் தொல்லைகளுக்கு உட்படுகின்ற பெண்கள் பெற்றோர்கள் அல்லது காவல் நிலையத்தில்  முறையிட்டாலும்,  அல்லது தானாகவே எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட அவர்களுக்கான பாதுகாப்பை பெற முடிவதில்லை. 

அழகை அல்லது பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட வன்மங்கள் நிறைந்த பல மிருகங்கள் இந்நாட்டின் திருமகள்களை, தேவதைகளை, வேர்களை  'ஆசிட் வீச்சு' எனும் பேரால் நிர்மூலமாக்கி இருக்கின்றன.



சரி இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அரசாலும், ஆசிரியர்களால் முடியும். மத்திய அரசும், மாநில அரசுகளும் மாணவர்களின் ஒழுக்கக் கல்விக்கு முக்கியத்துவம் தரும்படி திட்டங்கள் வகுக்க வேண்டும்.  

கண்டிப்பு இருந்தால் தான் ஒழுக்கம் வரும்  என்பது விதி. ஒழுக்கம் தவறும் போது தண்டனை வரும் என்பதை ஆசிரியர்கள் சிறு வயது முதலே மாணவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்.(ஆனால் ஆர்வக் கோளாறில் நாம் தண்டனை அளிக்கக் கூடாது). வன்முறையற்ற தண்டனைகள் தர ஆசிரியர்களை அனுமதிக்கலாம்.  

Slow Learners ஐ படிக்க வைக்கலாம். அது நம் கடமை. ஆனால் முறைகேடுகளாலேயே முன்னுக்கு வந்து விடலாம் என்பவர்களை( Eg. Bihar SSLC Exam Video) எப்படி படிக்க வைக்க முடியும். அப்படி இருப்பவர்களை கண்டறிந்து, தொழிற்கல்வி பள்ளிகள் அமைத்து, ராணுவப் பள்ளி ஆசிரியர்களை கொண்டு வேலைவாய்ப்புகள்  தரக்கூடிய தொழிற் கல்வி  போன்ற மாற்றுக் கல்வி திட்டங்கள் அளிக்கலாம்.


சரி  இவற்றையெல்லாம் நாம் ஏன் இப்போது பேசுகிறோம்?


மிகக் கொடூரமான, ஆசிட் வீச்சுக்கு இலக்கான மேலே படத்தில் உள்ள லட்சுமி என்ற இளம்பெண்ணின் வழக்கை, 2006ம் ஆண்டு முதல் விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை கொண்ட அமர்வுசிறப்பான ஒரு உத்தரவை நேற்று பிறப்பித்தது.


'ஆசிட்' தாக்குதலுக்கு இலக்காகும் பெண்களுக்கு, உடனடியாக, தேவையான அனைத்து விதமான மருத்துவ சிகிச்சைகளையும், அருகில் உள்ள தனியார் மருத்துவமனை இலவசமாக மேற்கொள்ள வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.



ஆசிட் வீச்சுக்கு இலக்காகும் பெண்கள், உடனடியாக தகுந்த சிகிச்சை கிடைக்காததால் தான், கடும் பாதிப்படைந்து உடல் பாகங்கள் கோரமாக ஆகின்றன என்பதால், இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மதன் பி லோகுர், யு.யு.லலித் பிறப்பித்தனர்.

மேலும், இந்த உத்தரவை அனைத்து தனியார் மருத்துவமனைகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்; அதற்கான விழிப்புணர்வை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையிடம் இருந்தும் அதற்கான உறுதிமொழியை பெற்று, அருகில் உள்ள நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும், இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.