Sunday, May 31, 2015

Maggi நூடுல்ஸ் - தீங்கு விளைவிக்கும் பொருட்களால் நெஸ்லே நிறுவனம் மீது வழக்கு

 
மேகி நூடுல்ஸின் பாதுகாப்பு தரத்தை எதிர்த்து நெஸ்லே இந்தியா நிறுவனங்கள், மற்றும் அதன் மேலாளர்கள் 3 பேர் மீது, பாரபங்கி  நீதிமன்றத்தில்  உத்தரப்பிரதேச உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில் நேற்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸ்’ ஐ  நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். 

இந்த நூடுல்சின் தரம் குறித்து சமீபத்தில் பெரும் சந்தேகம் கிளம்பியது. இதையடுத்து, உத்தரப்பிரதேச மாநில உணவு பாதுகாப்பு  மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள Easyday கடையில் இருந்து நூடுல்ஸ் பாக்கெட்டுகளை எடுத்து வந்து ஆய்வு  செய்தது.

அப்போது அதில் மோனோ சோடியம் குளூட்டாமேட் (Mono sodium Glutamate- MSG)
என்ற அமினோ அமிலம் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும், 17 மடங்கு அதிகமாக இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது. இது குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் உடல்நலத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்கக் கூடியது.  இதைத்தொடர்ந்து  மாநில சந்தைகளில் இருந்து  நூடுல்சை திரும்ப பெற நெஸ்லே இந்தியாவுக்கு உத்தரப்பிரதேச அரசு உத்தரவிடப்பட்டது. மேலும்,  பாரபங்கி கூடுதல்  தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில் நெஸ்லே நிறுவனம் மீது நேற்று வழக்கு  தொடரப்பட்டது.

இது குறித்து பாரபங்கி உணவு பாதுகாப்பு அதிகாரி வி.கே.பாண்டே கூறுகையில், ‘ உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவன ஆணையர்  பி.பி.சிங்,  நெஸ்லே நிறுவனம் மீது வழக்கு தொடர அனுமதி அளித்தார். அதன் அடிப்படையில்  ஹரோலியில் உள்ள நகல் கலன் தொழில்நுட்ப  பூங்காவில் உள்ள நெஸ்லே நிறுவனம், டெல்லியில் உள்ள நெஸ்லே நிறுவனம், பாரபங்கியில் உள்ள Easyday  நிறுவனம், டெல்லியில் உள்ள Easyday,  நிறுவன மேலாளர்கள் மோகன்குப்தா, சபாப்ஆலம், பாண்டே ஆகியோர் மீது கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டுள்ளது ’ என்றார்.

பாரபங்கியைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்து மக்களை தவறாக திசை திருப்பிய நடிகர் அமிதாப், நடிகைகள்  மாதுரிதீட்சித், ப்ரீதி ஜிந்தாஆகியோர் மீது தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனியாக நேற்று வழக்கு தொடர்ந்துள்ளார். இவர்கள்  மீது குற்றவியல் சட்டம் 420, 272, 273, மற்றும் 109 ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.