Wednesday, May 20, 2015

காலதாமதமாகும் இடமாறுதல் கலந்தாய்வு: ஏமாற்றத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள்

இடமாறுதல் கலந்தாய்வு எப்போது?

 

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கிவிட்ட நிலையில், இடமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை இன்னும் வெளியிடப்படாததால் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களின் இடமாறுதல் கலந்தாய்வு குறித்த அரசாணை ஏப்ரல் இறுதியில் வெளியிடப்பட்டு, கல்வித்துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் மே முதல் வாரத்தில் வெளியாகிவிடும். அதைத்தொடர்ந்து, மே மாதம் இறுதியில் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறந்ததும் புதிய பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்துவிடுவர். ஆனால், இந்த ஆண்டு என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, இன்னும் அரசாணையே வெளியிடவில்லை

இடமாறுதலைப் பொருத்தவரையில், முதலில் கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிடும். அந்த ஆணையை அடிப்படையாகக் கொண்டு இட மாறுதல் கலந்தாய்வு நடத்தும் முறைகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரும், தொடக்கக்கல்வி இயக்குநரும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவர். அதைத்தொடர்ந்து கலந்தாய்வு நடத்தப்படும். 

 பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கிவிட்ட நிலையில் இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ஏதும் இன்னும் வெளியிடப்படாததால் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.