Friday, May 29, 2015

‘திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்’ - பள்ளிக்கல்வி இயக்குனர்

குட்டிப் பசங்க கவலை 



“பெற்றோர் வதந்திகளை நம்பி குழம்ப வேண்டாம்; திட்டமிட்டபடி, ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும்,” என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.


கோடை விடுமுறைக்கு பின், வரும் ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் துவங்கும் என, கல்வித் துறை அறிவித்திருந்தது. ஆனால், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மாணவர் நலன் கருதி, பள்ளி திறக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என, பல்வேறு ஆசிரியர் சங்கத்தினர், தனியார் பள்ளி நிர்வாகிகள், அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.


இதனால், பெற்றோர், மாணவ, மாணவியர் மத்தியில், ஒருவித குழப்பம் நிலவி வருகிறது. தினந்தோறும்  தொலைக்காட்சி, செய்தித் தாள்களில் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து ஏதேனும் அறிவிப்பு வருகிறதா என ஆராய்ச்சியே செய்து வருகின்றனர்.


இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அவர்கள் கூறியதாவது: 

"பள்ளி திறக்கும் தேதியில், எவ்வித மாற்றமும் செய்யவில்லை. ஏற்கனவே அறிவித்தபடி, ஜூன் 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும். பாட புத்தகங்கள், சீருடைகள் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள், தீவிரமாக நடந்து வருகின்றன. பெற்றோர், எவ்விதகுழப்பமும் அடைய தேவையில்லை" என தெரிவித்துள்ளார்.