Thursday, May 7, 2015

பிளஸ் 2 தேர்வில் 90.6% தேர்ச்சி: மாநில அளவில் திருப்பூர் பவித்ரா, கோவை நிவேதா முதலிடம்


தமிழகம், புதுச்சேரியில் 8.80 லட்சம் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருந்த பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. 


தமிழை முதன்மை பாடமாக எடுத்துப் படித்த திருப்பூர் விகாஸ் வித்யா மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ரா முதலிடம் பெற்றார். இவர் 1192 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதேபோல் கோவை சவுடேஸ்வரி வித்யா மெட்ரிக் பள்ளி மாணவி நிவேதாவும் 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 



1190 மதிப்பெண்கள் பெற்று 4 பேர் இரண்டாம் இடம் பிடித்தனர். ஈரோடு மாவட்ட ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த விக்னேஸ்வரன், நாமக்கல் எஸ்.கே.வி.பள்ளியைச் சேர்ந்த பிரவீண், நாமக்கல் SSM Lakshmi Ammal மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவர் சரண்ராம், திருச்சி சவுடாம்பிகா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி வித்யவர்ஷினி ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 


நாமக்கல் மாவட்டம் டிரினிட்டி அகாடமி மாணவி பாரதி 1189 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் தேர்வு துறை இயக்குநர் தேவராஜன் வெளியிட்டார். 

 பிளஸ் 2 தேர்ச்சியில் வழக்கம்போல் மாணவிகள் முன்னிலை 
 
பிளஸ் 2 தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 90.6%. கடந்த ஆண்டும் இதே தேர்ச்சி விகிதமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 87.5%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 93.4%. இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

 பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் முதலிடம்; கடைசி இடத்தில் அரியலூர் 
 
2015 பிளஸ் 2 தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் 97.46 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அரியலூர் மாவட்டம் 80.92 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 91.54 சதவீதத்துடன் 17வது இடத்தைப் பிடித்துள்ளது.

பாட வாரியாக 200-க்கு 200 பெற்றவர்கள் எண்ணிக்கை:
 
இயற்பியல்- 124, வேதியியல்- 1,049, உயிரியல்-387, தாவரவியல்-75 விலங்கியல்-4, கணிதம்-9710, கணினி அறிவியல்-577, வணிகவியல்-819, கணக்குப்பதிவியல்-5,167, வணிகக் கணிதம்- 1,036 பேர் 200-க்கு 200 பெற்றுள்ளனர். 

இயற்பியலில் வீழ்ச்சி
 
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இயற்பியல் பாடத்தில் சதம் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. 
சாதித்த அரசுப் பள்ளி மாணவர்கள்:
 
அரசியல் அறிவியல் பாடத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் மாநிலத்தில் முதலிடத்தையும், மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளை விஞ்சிய மெட்ரிக் பள்ளிகள்:
 
2015 பிளஸ் 2 தேர்வில் அரசுப் பள்ளிகளைவிட தனியார் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளிலேயே தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.  சுயநிதி மெட்ரிக் 97%, அரசுப் பள்ளிகள் 84% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 
புதுச்சேரியில் 88.16% தேர்ச்சி:
 
புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் 88.16 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்தாண்டை விட 1.45 சதவீதம் குறைவு.  புதுச்சேரியில் 88.16% பிளஸ் 2 தேர்ச்சி: 2 மாணவிகள் முதலிடம்  பெற்றுள்ளனர்.
 
தலைமை ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழை (புரவிஷனல் மார்க் ஷீட்) தாங்கள் படித்த பள்ளியில் மே 14-ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.