Wednesday, August 12, 2015

இடமாறுதல் கவுன்சிலிங் - ஜூன் to ஜூன் கல்வியாண்டு கணக்கெடுப்பின் படி நடக்கும்

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில், ஜூன் மாதம் முதலே கல்வி ஆண்டு கணக்கில் எடுக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.


தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, கடந்த 8ம் தேதி கவுன்சிலிங் நடந்தது. இதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை, கல்வி ஆண்டாக எடுத்துக் கொண்டு, இட மாறுதல் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். 
தங்களுக்கும் அதேபோல கவுன்சிலிங் நடத்த வேண்டும் என, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர், தமிழக அரசிடம் மனு அளித்தனர். சங்க நிர்வாகிகள், பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் சபிதாவை சந்தித்தும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினர்.
ஆனால், 'அரசாணையில் உள்ளபடி, ஜூன் மாதமே கணக்கில் எடுக்கப்படும்' என பள்ளிக்கல்வி செயலர் சபிதா அவர்கள் அறிவித்துள்ளார்.  மேலும், தொடக்க கல்வியிலும் ஜூன் மாதத்தை  கணக்கில் எடுத்து கலந்தாய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார்.
அந்த அடிப்படையில் இன்று(12.08.2015) அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடக்கிறது. உடற்கல்வி மற்றும் கலை ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது.
கவுன்சிலிங்கில் பங்கேற்க, இடமாறுதல் பெற்று ஓர் ஆண்டு பணியில் இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. 
கடந்த ஆண்டு ஜூன் மாத மத்தியில் கவுன்சிலிங் நடந்ததால், அப்போது இடமாறுதல் பெற்றவர்கள் இந்த ஆண்டு, கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது. ஆனால், ஆகஸ்ட் மாத கணக்குப்படி நடத்தினால், கடந்த ஆண்டு இடமாறுதல் வாங்கியவர்கள், மீண்டும் இந்த ஆண்டு இடமாறுதல் பெற முடியும்.