Monday, August 24, 2015

மாணவர்களின் அறிவை வளர்க்க அனிமேஷன்

மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், தொழில்நுட்பம் சார்ந்த, மாநில அளவிலான கற்பித்தல் போட்டியில், நீலகிரி மாவட்டம், தேனாடு ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர் தர்மராஜ் முதலிடம் பெற்றுள்ளார். 

இவர், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடங்களை  அனிமேஷன் மற்றும் வீடியோ காட்சிகளாக மாற்றி கற்பித்தல் முறையை வடிவமைத்துள்ளார். 

கழிவு நீக்க மண்டலம், சிறுநீரகத்தின் அமைப்பு மற்றும் பணி, வேரின் அமைப்பு மற்றும் பணி, தனிம வரிசை அட்டவணை, காடுகள், வன விலங்குகளின் பாதுகாப்பு, எலும்பு மண்டலம், மீன், தேனீ வளர்ப்பு, தாவர உலகம், அணு அமைப்பு உள்ளிட்ட பாடப் பகுதிகள், நவீன தொழில்நுட்ப முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.


ஆன்ட்ராய்டு மொபைல் போன் மூலம் கல்வி மென்பொருளை பயன்படுத்தி தமிழ் அகராதி, வார்த்தை உச்சரிப்பு, திருக்குறள் வாசிப்பு, மேடைப் பேச்சுக்கு ஆயத்தமாக்குதல் போன்ற படைப்புகளையும் உருவாக்கியுள்ளார். இவரது படைப்பு, வரும் டிசம்பரில் நடக்கவுள்ள தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2010ல் மைக்ரோசாப்ட் நிறுவனம் கற்பித்தலில் புதுமை படைத்ததற்காக, தேசிய அளவிலான விருதை  தர்மராஜிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.