Tuesday, August 25, 2015

இளைஞர் பாதுகாப்பு படையினருக்கு காவல் துறையில் பணி - தமிழக அரசு அறிவிப்பு

 
இளைஞர் பாதுகாப்பு படையினரை எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து காவல் துறையில் பணி வழங்க அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக போலீசாருக்கு உதவிகரமாக செயல்பட இளைஞர் பாதுகாப்பு படை என்ற அமைப்பை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். இதையடுத்து 10,099 இளைஞர் பாதுகாப்பு படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் தற்போது போலீசாருக்கு உதவியாக ரோந்து பணி, தபால் கொண்டு செல்லும் பணி போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள்.

இளைஞர் பாதுகாப்பு படையினருக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியை அரசு தற்போது அறிவித்துள்ளது.

ஒரு ஆண்டு காலம் தங்களது பணியை சிறப்பாக செய்த இளைஞர் பாதுகாப்பு படை வீரர்கள் போலீஸ் வேலையில் சேர அரசு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அவர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (www.tnusrb.tn.gov.in) நடத்தும் எழுத்து தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுத வேண்டும். பொது அறிவு மற்றும் போலீஸ் சம்பந்தப்பட்ட தேர்வில் பங்கேற்க வேண்டும். 

பொது அறிவு தேர்வில் 60 மதிப்பெண்களும், போலீஸ் சம்பந்தப்பட்ட தேர்வில் 40 மதிப்பெண்களும் ஒதுக்கப்பட்டிருக்கும். இரண்டு தேர்விலும் குறைந்த பட்சம் 35 மதிப்பெண்கள் பெற்றால் தகுதி பெற்றவர்களாக கருதப்படுவார்கள். தேர்வு பெற்றவர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ் வேலைக்கு சேர்க்கப்படுவார்கள்.

காலி இடங்கள் மற்றும் சாதி ஒதுக்கீடு அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.