Sunday, August 16, 2015

அன்பின் தலைவன்


கலாமின் செயலாளராக இருந்த பி.எம்.நாயர், IAS  எழுதிய புத்தகத்தில் இருந்து: 

  • ஜனாதிபதிகள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அந்நாட்டு தலைவர்களாலும், முக்கிய நபர்களாலும் அவர்களுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். கலாம் ஜனாதிபதியாக இருந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்களை பெற்றுக் கொண்டார். அவர் அந்த பரிசுகளை புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு, ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகத்திற்கு அனுப்பி விடுவார். அதன் பிறகு தனக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்களை அவர் பார்த்தது கூட கிடையாது.
     
  • தனது பதவி காலம் முடிந்து ராஷ்டிரபதிபவனை விட்டு செல்லும் போது, ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு பென்சிலை கூட அவர் எடுத்துச் செல்லவில்லை


  • ரம்ஜான் மாதத்தில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபலங்களை அழைத்து ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்து அளிப்பது காலம் காலமாக நடைபெற்று வரும் நடைமுறையாகும். ஆனால் இப்தார் விருந்து அளிக்காத ஒரே ஜனாதிபதி கலாம் மட்டும் தான்

    'இப்தார் விருந்து அளிக்க சராசரியாக எவ்வளவு செலவாகும்?' என கலாம் எங்களிடம் கேட்டார். ரூ.22 லட்சம் வரை ஆகும் என நாங்கள் பதிலளித்தோம். அதனை கேட்ட கலாம், அப்படியானால் அந்த இப்தார் விருந்திற்கு ஆகும் செலவை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அளிக்கும்படி எங்களிடம் கூறினார். அது போக அவரும் தனது சொந்த பணத்தில் ரூ.1 லட்சம் பணத்தை அளித்து, அந்த ஆதரவற்றோர் இல்லங்களுக்கு பணமாகவோ அல்லது தேவையான பொருட்களாகவோ வாங்கி கொடுத்து விடுங்கள் என்றார். ஏழை மக்களுக்கு இப்தார் விருந்து அளிக்கவே தான் விரும்புவதாகவும், ஆனால் அரசு விதிகள் அதற்கு இடம் அளிக்காது என்பதால் இப்படி செய்து விடுங்கள் என்றார். மேலும், இதில் எந்த காரணத்திற்காகவும் தனது பெயர் வெளியில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் எங்களிடம் கேட்டுக் கொண்டார்.


  • கலாமிற்கு அவரது சொந்த ஊரில் 50க்கும் மேற்பட்ட உறவினர்கள் உள்ளனர். அவர்கள் ஒருமுறை டில்லியை சுற்றி பார்ப்பதற்காக வந்தனர். அவர்களை ஜனாதிபதி மாளிகையில் தங்க வைத்த கலாம், அவர்கள் சுற்றி பார்ப்பதற்கு வாகனங்களையும் ஏற்பாடு செய்ய சொன்னார். ஆனால் அவர்கள் தங்கியதற்கான வாடகை, கார் வாடகை, உணவு ஆகியவற்றிற்கான செலவு ரூ.2 லட்சத்தை கலாம் தனது சொந்த பணத்தில் தான் அளித்தார். 

  • ஒருமுறை அவரது சகோதரர் டில்லி வந்திருந்தார். ஒரு வாரம் அவரை தனது அறையிலேயே கலாம் தங்க வைத்துக் கொண்டார். இருப்பினும் ஒருவர் ஜனாதிபதி மாளிகையில் தங்குவதற்கான அறை வாடகை எவ்வளவு ஆகும் எனக் கேட்டு, அதனையும் அவரது சொந்த பணத்தில் இருந்து கொடுத்தார். ஜனாதிபதி மாளிகையில் அதுவும் தனது அறைக்கே வாடகை அளித்த ஒரே ஜனாதிபதியும் கலாம் தான்.
     
  • தனது பதவி காலம் முடிந்து செல்ல இருந்த கலாமிற்கு ஜனாதிபதி மாளிகை அலுவலர்கள் அனைவரும் அவர்களது குடும்பத்துடன் சென்று வழிஅனுப்பி வைத்தனர். நான் சென்ற போது, உங்களின் மனைவி வரவில்லையா என என்னிடம் கேட்டார். 'ஒரு சிறு விபத்து. அதனால் அவர்களால் வரமுடியவில்லை' என நான் கூறினேன். 

    மறுநாள் காலை என் வீட்டின் முன் ஒரு பெரிய போலீஸ் படையே வந்து குவிந்தது. சற்று நேரத்தில் கலாம் அவர்களே நேரடியாக என் வீட்டிற்கு வந்து, என் மனைவியை நலம் விசாரித்தார். சாதாரண அலுவலரின் வீட்டிற்கும் வந்து நலம் விசாரிக்கும், எளிமை தன்மை கொண்டவர் கலாம்.