Wednesday, July 29, 2015

மக்கள் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் -இறுதி யாத்திரையை நோக்கி...



மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடல் இன்று காலை தமிழகம் கொண்டு வரப்படுகிறது. 

முழு அரசு மரியாதையுடன் நாளை(30.07.2015) காலை 11 மணிக்கு, அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம், தங்கச்சிமடம் அருகில் அமைந்துள்ள பேய்க்கரும்பு கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


84 வயதான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 27.07.2015 அன்று காலமானார். 

மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் IIM கல்வி நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, திடீரென மயங்கி விழுந்த அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. 

கலாம் மறைவுச் செய்தியறிந்து நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.


மறைந்த அப்துல் கலாம் உடல் கவுஹாத்தி விமான நிலையத்தில் இருந்து டெல்லி பாலம் விமான நிலையத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. 

கலாம் உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, முப்படைத் தளபதிகள், பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்,   டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்க் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கலாமின் உடல் டெல்லி பாலம் விமான நிலையத்திலிருந்து ராணுவ மரியாதையுடன் ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி, ராகுல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலாம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.



பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை  ஆலோசனைக்கு பிறகு  ராமேஸ்வரத்தில் அரசு மரியாதையுடன் கலாமின் உடலை அடக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. 

டெல்லியில் இருந்து கலாம் உடல் இன்று(29.07.2015) காலை 8 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரை வருகிறது. 

மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியிலுள்ள பருந்து விமானப்படை தளத்திற்கு கலாம் உடல் கொண்டு செல்லப்படுகிறது.

உச்சிப்புளி விமானத்தளத்திலிருந்து ராணுவ வாகனம் மூலம் ராமேஸ்வரத்துக்கு உடல் கொண்டு வரப்படுகிறது.


அங்கு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலாம் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


பின்னர் ராமேஸ்வரம் முஸ்லிம் பள்ளிவாசல் தெருவில் உள்ள கலாமின் சகோதரர் வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு உறவினர்கள், குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துகின்றனர். இரவு முழுவதும் அவரது வீட்டிலேயே உடல் வைக்கப்படுகிறது.


நாளை காலை 11 மணிக்கு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு தொழுகை செய்யப்படுகிறது.

அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தங்கச்சிமடம் அருகில் அமைந்துள்ள பேய்க்கரும்பு கிராமத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.


அங்கு பிரதமர் மோடி, ஆளுநர் ரோசையா, மத்திய, மாநில அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். பின்னர் அங்கேயே அவரது உடல் அடக்கம் செய்யப்படும்.

மண்ணின் மைந்தர் அப்துல் கலாம் உடலை எதிர்பார்த்து ராமேஸ்வரம் தீவு கண்ணீர்க் கடலில் ஆழ்ந்துள்ளது.





அப்துல் கலாம் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறுவதால், நாளை வியாழக் கிழமை அன்று (30-07-2015) தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் அலுவலகங்கள் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னால் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை (ஜூலை 30) கடைகள் அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை அழைப்பு விடுத்துள்ளன.

அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் வரை, கடலுக்குச் செல்வதில்லை என்று ராமேசுவரம் பகுதி மீனவர்கள் அறிவித்துள்ளனர்.