Monday, November 16, 2015

தமிழ் பாடத்தை கட்டாயமாக்கி தமிழக அரசு இயற்றிய சட்டத்திற்கு எதிரான வழக்கு: நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஆராய உத்தரவு



பள்ளிகளில் 1ம்  வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை  தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக்கியது தொடர்பாக குழு அமைத்து ஆராயுமாறு, தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

1ம்  வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை  தமிழ் பாடத்தை கட்டாயமாக்கி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் சார்பில் சாதிக் பாஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அவர் தனது மனுவில், சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் தமிழை பயிற்றுவிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை என்றும், எனவே அரசின் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணை இன்று தலைமை நீதிபதி கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கட்டாயப் பாடமாக தமிழ் பயிற்றுவிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஆராய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.