Wednesday, October 5, 2016

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

திமுக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

தமிழக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19-ந் தேதிகளில் நடைபெறும் என மாநில தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே வேட்பு மனு தாக்கல் தொடங்குவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

திமுக சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த  வழக்கின் தீர்ப்பாக, தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்வதாக நீதிபதி கிருபாகரன் தீர்ப்பளித்தார். 

தீர்ப்பின் சாராம்சம் பின்வருமாறு :
 
"தமிழகத் தேர்தல் ஆணையத்தின் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யப்படுகிறது. மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும். உள்ளாட்சித் தேர்தல்தான் ஜனநாயகத்தின் ஆணிவேர். ஆணிவேர் சரியாக இருந்தால்தான் ஜனநாயகம் வலுப்பெறும். 

புதிய அறிவிப்பாணை வெளியிடுவதற்கு முன்னர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்துக்கு உரிய பிரதிநித்துவம் வழங்கப்பட வேண்டும். 

கிரிமினல் பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது. உள்ளாட்சித் தேர்தலை ஜனநாயக முறைப்படி செயல்படுத்த வேண்டும். பணம் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கக் கூடாது.

புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு, டிசம்பர், 31க்குள் தேர்தல் நடத்தப் பட வேண்டும். அதுவரை, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க, தனி அதிகாரிகளை அரசு நியமிக்க வேண்டும்."
 
இவ்வாறு நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சித் தேர்தலுக்கான வழிமுறைகளை தெரிவித்தார். 



No comments: