Sunday, January 10, 2016

2 லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குவோர் 'PAN CARD' எண்ணை தெரிவிக்க வேண்டும்

நகை விற்பனை  25% குறைவு 

2 லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குவோர், 'பான் கார்டு' எண்ணை தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால், நகை விற்பனை, 25 - 30 சதவீதம் குறைந்து விட்டதாக, தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  

நவரத்தினங்கள் மற்றும் தங்க நகை கூட்டமைப்பான - ஜி.ஜே.எப்.,பின் தலைவர் ஸ்ரீதர் கூறியதாவது: 2016 ஜனவரி 1 முதல்,   2 லட்சம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குவோரிடம்  வருமான வரித் துறையின் பான் கார்டு எண் பெற வேண்டும் என, மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 
இதற்கு முன், இந்த வரம்பு, 5 லட்சம் ரூபாயாக இருந்தது; இது, தற்போது, 2 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டதால், தங்க நகை விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக,கிராமப்புறங்களில் நகை வர்த்தகம் குறைந்துள்ளது. நாட்டின் மொத்த நகை விற்பனையில், கிராமப்புறங்களின் பங்களிப்பு, 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. கிராமப்புற மக்கள், பாதுகாப்பிற்காக, தங்க நகைகளில் முதலீடு செய்கின்றனர்.

பான் கார்டு இல்லாததால், பலர் நகை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு தழுவிய அளவில், தங்க நகை விற்பனை, 25 - 30 சதவீதம் சரிவடைந்துள்ளது. மத்திய அரசு, உடனே இப்பிரச்னையில் தலையிட்டு, பான்கார்டுக்கான நகை விற்பனை வரம்பை, 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என
நவரத்தினங்கள் மற்றும் தங்க நகை கூட்டமைப்பின் சார்பில்  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது