Monday, January 4, 2016

இ- சேவை மையங்களில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி விரைவில் அறிமுகம்

வருவாய்த் துறை மூலம் நேரடி பட்டா, உள்பிரிவு பட்டா மாற்றம் செய்ய வட்டாட்சியர் அலுவலகம் செல்லாமலேயே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. வருவாய்த் துறை மூலம் நேரடி பட்டா மாறுதல், உள்பிரிவு பட்டா மாறுதல் பணிகளை வருவாய், நில அளவைத் துறைப் பணியாளர்களால் வட்டாட்சியர் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படுகிறது. இன்னும் பலரது சொத்துக்கள் தங்கள் மூதாதையர்கள் பெயரிலேயே இருப்பதால், அவர்களால் அரசு வழங்கக் கூடிய விவசாயக் கடன், சலுகைகளைப் பெற முடியாமல் அவதியுற்று வருகின்றனர். 
இதனால், சொத்துக்கள் உரிமையாளர்கள் பெயரில்தான் இருக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2003-ஆம் ஆண்டில் இருந்து கைகளால் எழுதப்பட்ட பட்டா, நிலப் பதிவேடுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு, கணினி வழி பட்டா வழங்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்த நிலையில், பட்டா மாறுதலுக்கு பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கும் வசதி நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியது: பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மேம்படுத்தி பட்டா மாறுதல்கள் இணைய வழியில் வழங்கும் வகையில், பட்டா மாறுதலுக்கான தமிழ் நிலம் மென்பொருள் என்ற இணையதள வசதியுடன் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ் வசதியைக் கொண்டு பட்டா மாறுதல் கோரும் பொதுமக்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உள்ள பொது இ-சேவை மையங்கள், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், நகராட்சி அலுவலகத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் விண்ணப்பம் அளிக்கலாம்.

விண்ணப்பிப்போரின் சொத்து விவரங்கள் குறித்த அசல் ஆவணங்களை இம் மையத்தில் அளித்து அவை இ-சேவை மையத்தில் ஸ்கேன் செய்யப்பட்டு, மீண்டும் மனுதாரருக்கு ஒப்படைக்கப்படும். விண்ணப்பம் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு இ-சேவை மையத்தால் மனுதாரருக்கு வழங்கப்படும். இம் மனு ஏற்கப்பட்ட விவரம் மனுதாரருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

பட்டா மாற்றப்பட்ட பின்னர் அதன் உத்தரவை பொது இ-சேவை மையங்களில் மனுதாரர் பெற்றுக் கொள்ளலாம். இப் பட்டாவுக்கு வட்டாட்சியர் கையொப்பம் தேவையில்லை. இதன் மூலம், பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் செல்லாமலேயே பட்டா மாறுதல் உத்தரவைப் பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.