Wednesday, March 1, 2017

10ம் வகுப்பு, மார்ச் 2017 - பொதுத்தேர்வு எழுதவுள்ள மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்கள்(Urdu, Telugu, Kannada, Malayalam-Language Minority Students) தமிழ் பாடத்தேர்வு எழுத தேவையில்லை

'மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு , இந்த ஆண்டும்(மார்ச் 2017), தமிழ் மொழி பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும்' என, பள்ளி கல்வித் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கடந்த ஆண்டு 

தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தமிழ் மொழி பாடத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என, 2006ல் சட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம், ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் கூறப்பட்டது. அதன்படி, 2016ல், 10ம் வகுப்பு தேர்வில், தமிழ் மொழி பாடத்தேர்வு எழுத வேண்டும். அப்போது, மொழி சிறுபான்மை பள்ளிகள் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழ் மொழி கற்பிக்க, தமிழ் ஆசிரியர்களை அரசு நியமிக்கவில்லை; எனவே, இந்த ஆண்டு தமிழ் பாடத்தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும் என, கோரப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 10ம் வகுப்பு தேர்வில், தமிழ் மொழி பாடத்தேர்வு எழுத, மொழி சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டது. 

தற்போது 

தற்போது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்க உள்ளதால், மொழி சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன. அதில், தமிழ் மொழி பாடம் தேர்வு எழுத விலக்கு அளிக்கவும், அதற்கு பதில், தங்கள் தாய் மொழி பாடத்தில் எழுத அனுமதிக்கவும் கோரப்பட்டது.

மனுக்களை, தற்காலிக தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் அடங்கிய, ’முதல் பெஞ்ச்’ விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.பிரபாகரன், ரவீந்திரன் மற்றும் வழக்கறிஞர் தாட்சாயிணி ரெட்டி ஆஜராகினர்.

வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பின், ’உயர் நீதிமன்றம், 2016 மார்ச்சில் பிறப்பித்த உத்தரவு, இந்த ஆண்டுக்கும் தொடரும்’ என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிப்பதற்கான நடவடிக்கைகளை, இரண்டு நாட்களில் முடிக்கும் படியும், கல்வித்துறைக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

 

No comments: