Friday, September 2, 2016

இன்று பாரத் பந்த்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளன. 
 
வங்கி, இன்சூரன்ஸ் பணிகள் உட்பட நாடு முழுக்க அரசு மற்றும் தனியார் பணிகளில் 15 கோடி ஊழியர்கள் இந்த சங்கங்களை சேர்ந்தவர்களாக இருப்பதால் வேலை நிறுத்த பாதிப்பு பெருமளவில் இருக்கும் என கூறப்படுகிறது.
சாலை போக்குவரத்து, மின் வினியோகம், சமையல் எரிவாயு, எண்ணை சப்ளையில் பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது. மின்சாரம், சுரங்கம், பாதுகாப்பு, டெலிகாம் மற்றும் இன்சூரன்ஸ் துறைகள் பாதிப்பை சந்திக்கும் எனவும், வங்கிகள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் அனேகமாக மூடப்படும் எனவும் தெரிகிறது. 
 
ஆட்டோ, டாக்சி யூனியன்கள் பலவும் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்து்ள்ளதால் அவற்றின் போக்குவரத்து பாதிக்கப்படலாம். 
 
தமிழகத்தை பொறுத்தளவில்,  வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் பங்கேற்கிறது. அரசு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதாவை கைவிடக்கோரி தமிழ்நாடு சாலை போக்குவரத்து பாதுகாப்பு குழுவும் போராட்டத்தில் கலந்து கொள்கின்றன. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்பதால் தனியார் பஸ், ஆட்டோ, லாரிகள் ஓடாது. வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகத்தில் அரசு பணிகள், வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 
 
வங்கிகளை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள 6000 வங்கி கிளைகளில் சேவை கடுமையாக பாதிக்கப்படும். பணப்பட்டு வாடா, காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவையும் முற்றிலும் முடங்க வாய்ப்பு உள்ளது. 
 
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்செல்வி கூறுகையில், புதிய பென்‌ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதிய மாற்றுக் குழு அமைக்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழகத்தில் போராடி வருகிறோம். அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 5 லட்சம் அரசு ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கிறோம் என்றார். 
 
இன்று நடக்கும் போராட்டத்தில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி, ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் ஈடுபடுகின்றனர்.

No comments: