Wednesday, December 24, 2014

K BALACHANDAR ( 09.07.1930 - 23.12.2014 )

 
மனதில் உறுதி வேண்டும் 
வார்த்தையிலே தெளிவும் வேண்டும் 
உணர்ச்சி என்பது வேண்டும் 
ஒளிபடைத்த பார்வை வேண்டும்  ஞானதீபம் ஏற்ற வேண்டும்

இடைவரும் பலவிதத் தடைகளை  
தகர்த்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும் 
இலக்கியம் பெண்மைக்கு இலக்கணம் நீ என  
யாரும் போற்ற வேண்டும்.

மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்  
 மானம் காக்கும் மாந்தர் யார்க்கும் மாலை வாங்கி போடுவோம்.
வீடு காக்கும் பெண்ணை வாழ்த்தி  
நாடும் ஏடும் பேச வேண்டும்.

சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை
  பூமி பார்க்க வேண்டும்.
தூரத்து தேசத்தில் பாரதப் பெண்மையின் 
பாடல் கேட்க வேண்டும்.

பெண்கள் கூட்டம் பேய்கள் என்று  
பாடம்  சொன்ன சித்தர்களும் 
ஈன்ற தாயும் பெண்மை என்று  
எண்ணிடாத பித்தர்களே.
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்.







தஞ்சாவூர் மாவட்டம்  நன்னிலத்தில்  09.07.1930ல்  தமிழ்  பிராமண குடும்பத்தில்  பிறந்ததவர் கைலாசம் பாலசந்தர்.  அண்ணாமலை  பல்கலைகழகத்தில்  படித்த  உயிரியல்  பட்டதாரியான  இவர்  1949ல்  திருவாரூர் முத்துப்பேட்டையில்  பள்ளி  ஆசிரியராக  தனது கேரியரை துவக்கினார்.

1950ல்  சென்னையில் உள்ள  Account General அலுவலகத்தில்  கிளார்க் ஆக பணியில் சேர்ந்தார். ஆரம்பத்தில்  பல்வேறு மேடை நாடகங்களுக்கு கதை வசனம்  எழுதியும் , இயக்கியும்  தனது  கலைப் பயணத்தை  துவக்கிய  பாலச்சந்தர்  அவர்கள் எம்.ஜி.ஆர்  அவர்களின்  தெய்வத் தாய்  படத்திற்கு  கதை  வசனம்  எழுதி உள்ளார். 

திரைத்துறையில்  1965ம்  ஆண்டு  வெளியான  நீர்க்குமிழி  இவர் இயக்கிய  முதல் படமாகும் . நாகேஷ்  அவர்கள்  இதில்  கதாநாயகனாக நடித்தார்.

இவருடைய  பெரும்பாலான  படங்களில் , மனித உறவு  முறைகளுக்கு  இடையிலான  சிக்கல்கள் , சமூக பிரச்சினைகள்  ஆகியவையே  கருப்பொருளாய் விளங்கின .

சர்வர் சுந்தரம், பாமா  விஜயம், தில்லு முள்ளு ஆகியன சிறந்த  நகைச்சுவை கலந்த  குடும்ப  சித்திரங்களாகும் .

 

அபூர்வ ராகங்கள் , புன்னகை மன்னன் , எதிர்நீச்சல் , வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி, சிந்து  பைரவி, அவள்  ஒரு  தொடர்கதை, புது புது அர்த்தங்கள், வெள்ளி  விழா, அரங்கேற்றம் , நிழல்  நிஜமாகிறது, மனதில் உறுதி  வேண்டும் முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். 



தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, உன்னால் முடியும் தம்பி,  ஒரு வீடு இரு வாசல், கல்கி என்று எத்தனையோ சமுக அக்கறையுள்ள கதைகளை திரைத்துறையில் புகுத்தியவர் கே.பி. 






சிவாஜிராவ்  ஆக  இருந்தவரை  ரஜினிகாந்த்  ஆக  அபூர்வ  ராகங்கள்  படத்தில்  அறிமுகப்  படுத்தியவர். இவரது இயக்கத்தில் உருவான படங்கள் வழக்கமான சினிமா பாணியிலிருந்து சற்று வித்தியாசம் பெற்றிருந்தன. நாடகம் போன்ற அமைக்கப்பட்ட காட்சிகள் இவர் படங்களில் அதிக அளவில் காணப்பட்டாலும், முத்திரை பதிக்கும் வசனங்கள் முழுப்படத்திலும் பரவி இருக்கும்.



 அழுத்தமான கதையை மட்டும் நம்பியே இவரது படைப்புகள் படைக்கப்பட்டதால், பெரும்பாலும் புகழ் பெற்ற நடிகர்களை இவர் அவரது படங்களில் தேர்வு செய்தது இல்லை. குறிப்பாக இவர் இயக்கிய எந்த படத்திலும் நடிகர் எம்.ஜி.ஆர். நடித்ததில்லை அதேபோல் நடிகர் சிவாஜியும் கூட ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடித்திருந்தார். 

இவரது ஆரம்பக்கட்டம் தொடங்கி பெரும்பாலான படங்களில் நடிகர் நாகேஷ் மட்டும் அதிக அளவில் இடம் பெற்றிருந்தார். அதிலும் பாலச்சந்தர் எழுதிய கதையில் உருவான திரைப்படமான சர்வர் சுந்தரம் தான் நடிகர் நாகேஷை புகழின் உச்சத்திற்கே அழைத்து சென்றது.

நகைச்சுவைக்கான முக்கியத் துவத்தை அளித்த இதே இயக்குனர் பாலச்சந்தர், குடும்பச் சச்சரவுகள், உறவுகளின் உரசல்கள், சமுகப் பிரச்சனைகள் என்று பல்வேறு தரப்பட்ட தனித்துவ கதைகளை துணிச்சலான வகையில் அவர் கையாண்டார். 

துவக்கத்தில் மேடை நாடகங்களுக்கு கதைகள் எழுதியும், அவற்றை இயக்கம் செய்திருந்த கே.பாலச்சந்தர், திரைப்பட இயக்குனராக வெற்றி பின்பும் கூட தொலைக்காட்சி நாடகங்களை இயக்கியுள்ளார். 

தொலைக்காட்சிகளில் வெளியாகிய அவரது தொடர் நாடகங்கள் கூட தனிமுத்திரை பதித்து அவருக்கு தனி அடையாளம் பெற்றுக் கொடுத்தது. சின்னத்திரைகளில் தற்போது பிரபலாமாக இல்ல நீண்ட நாட்களுக்கு ஒளிப்பரப்பாகும் நெடுந்தொடர் என்னும் முறையையும் இவர் தான் அறிமுகம் செய்தார் என்பதும் கவனிக்கத்தக்கது. 

தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக தனது கலை சேவையை தொடர விரும்பிய அவர், அதன் மூலமாகவும் பலருக்கும் பலவிதமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். 

கலை உலகில் போற்றப்படுபவர்களை பின்தொடராமல், கலையை, அவர் போற்றிய காரணத்தினால் தான் கலைத்துறை கொண்டாடும் இயக்குனராக மக்கள் மனதில்  என்றும்  நீங்காமல்  இடம்  பெற்றிருக்கிறார் கே.பாலச்சந்தர்.