Showing posts with label Philosophy. Show all posts
Showing posts with label Philosophy. Show all posts

Thursday, August 6, 2015

Zen Parables


 Zen  Parables 
 
அற்புதம் 


ஜென் குரு பாங்கெய் அவர்கள்  ஆலயத்தில் மக்களுக்கு அருளுரைகளை வழங்கி வந்தார்.

அவரைக் காண வந்த  ஷின்ஷு போதகர் ஒருவர்,  ஜென் குருவின் அருளுரைகளைக் கேட்கத் திரளாக மக்கள் வந்து கூடுவதைக் கண்டு பொறாமை கொண்டார்.
 
ஜென் குருவிடம் வாதம் செய்து அவரைச் சிறுமைப் படுத்தவேண்டும் என்பது அவரது எண்ணம்.

ஜென் குரு உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ஷின்ஷு போதகர் பெரிதாகச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

ஜென் குரு தனது பேச்சை நிறுத்தி  அவரிடம்  "உங்களுக்கு என்ன பிரச்சினை என நான் தெரிந்து கொள்ளலாமா ?" எனகேட்டார்.

ஷின்ஷு போதகர் குருவை நோக்கி, "முன்பொரு நாள், எங்கள் குருவானவர் ஒரு கரையிலும், அவரது சீடர் எதிர்க் கரையிலும் நின்றபோது ஓர் அற்புதம் புரிந்தார். 

கையில் ஒரு எழுதுகோலுடன் எங்கள் குரு இக்கரையில் இருக்க , அவரது சீடர்  எதிர்க்கரையில் தாளினை வைத்திருந்தார்.

அப்போது எங்கள் குருவானவர் "அமிதா" என்ற புனித நாமத்தை வானத்தின் வழியே எழுதி அனுப்பினார். அது அக்கரையில் சீடரின்  கையில் இருந்த தாளில் எழுதப்பட்டது.

இது போன்ற  அற்புதங்களை நிகழ்த்த உங்களால் முடியுமா?" என்று கேட்டார்.

ஜென் குரு இப்படி பதில் கூறினார்.

"ஒருவேளை உனது நரி அப்படிப்பட்ட வித்தையைச் செய்து காட்டி இருக்கலாம். ஆனால், அதற்குப் பெயர் ஜென் இல்லை!

நான் நிகழ்த்தும் அற்புதம் என்னவென்றால் எனக்குப் பசி ஏற்படும்போது சாப்பிடுவேன். எனக்குத் தாகம் எடுக்கும்போது தண்ணீரைக் குடிப்பேன்."

 





ஞானம்
 

ஜென் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த தத்துவ ஞானி ஒருவர் நெடுங்காலம் ஜென் நூல்களை நன்கு பயின்று வந்தார். 

ஒரு நாள், திடீரென்று அவருக்கு உயரிய ஞானம் கிடைத்தது.

உடனே அவர் தனது எல்லாப் புத்தகங்களையும் கொல்லைப் பக்கம் கொண்டு சென்று குவித்தார். 

அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தினார்.
 

Saturday, July 18, 2015

Zen Parables

 Zen  Parables
 

 
டைடோ கோகுஷி புனிதமான ஜென் துறவி. ஒருநாள், ஆற்றங்கரையில் இருந்த ஆசிரமத்தின் குளிர்ந்த ஆலமர நிழலில், அவர் தியானத்தில் அமர்ந்து இருந்தார்.

அவரை சோதனை செய்து விளையாட நினைத்த சிறுவன் ஒருவன் குருவி ஒன்றினைப் பிடித்து தனக்கு பின்புறம் கைக்குள் வைத்து மறைத்துக் கொண்டு ஜென் குருவிடம் வந்தான்.

துறவியின்  முன்னால் நமட்டு சிரிப்புடன் நின்றான். 

துறவி அவனை நிதானமாக பார்த்தார். 

அவன் துறவியை பார்த்து,

"குருவே என்னுடைய கேள்விக்கு சரியான பதிலை உங்களால் சொல்ல முடியுமா  என பார்க்க விரும்புகிறேன்" என்றான்.

துறவி புன்னகைத்தார்.

அவன் துறவியைப் பார்த்து  தனது கேள்வியை கேட்டான் 

"குருவே, என்னுடைய கைகளுக்குள் வைத்திருக்கும் பறவை உயிருடன் இருக்கிறதா அல்லது இறந்து விட்டதா?" என்று கேட்டான். 

"குரு "இறந்து விட்டது" என்று சொன்னால்,  தன்னுடைய கையில் இருக்கும் குருவியினை பறக்கவிடுவது; அப்படி இல்லாமல் குரு "உயிருடன் உள்ளது" என்று சொன்னால் தன்னுடைய கைகளுக்குள் மறைந்து இருக்கும்  குருவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவது" - இது தான் அவன் திட்டம்.

ஜென் துறவி சொன்னார்,

     " இந்தக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில்தான் உள்ளது" 


உணர்ந்தது
                 
     நமது கேள்விக்கான விளக்கங்களும், நமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் நம்மிடமே இருக்கின்றன"