Showing posts with label Teachers Day 2015. Show all posts
Showing posts with label Teachers Day 2015. Show all posts

Friday, September 4, 2015

ஆசிரியர் தினம் : முதல்வர் வாழ்த்து

 

செப்டம்பர் 5 - ஆசிரியர் தின வாழ்த்துரையாக தமிழக முதல்வர் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "கல்வி வளம் பெற்ற மாணவ சமுதாயத்தை உருவாக்கிட வேண்டுமென்ற லட்சியத்தோடும், தியாக உணர்வோடும், மன மகிழ்வோடும் ஆசிரியராக தன் பணியை தொடங்கி, இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த தத்துவ மேதை டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

மேலும் "ஒரு நாட்டின் உயர்வு தாழ்வு அந்த நாட்டின் இளைஞர்களுக்குக் கிடைக்கும் கல்வியைப் பொறுத்தே அமையும்" என்றார் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். தமிழகத்தில் அனைவருக்கும் தரமான கல்வியை அளித்திடும் வகையில் அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு 64,485.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. 

அத்துடன் 1,319 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, 182 தொடக்கப் பள்ளிகள், தேசிய சட்டப் பள்ளி, 4 அரசு பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட 53 கல்லூரிகள் புதிதாக துவங்கப்பட்டுள்ளன. சிறந்த கல்வியை மாணவர்கள் இடையூறின்றி பெற்றிடும் வகையில் இதுவரை இல்லாத அளவிற்கு 72,843 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. 

ஆசிரியர் பெருமக்களின் நல்வாழ்விற்காக திருச்சிராப்பள்ளியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஆசிரியர் இல்லம், சென்னை, சைதாப்பேட்டையில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் ஆசிரியர் இல்லக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 

அறியாமை என்ற இருளை நீக்கி, அறிவுக்கண்ணை திறந்திடும் மகத்தான மனிதவள மேம்பாட்டுப் பணியினை ஆற்றி வரும் ஆசிரியப் பெருமக்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் நல்லாசிரியர்களுக்கு "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டு சிறப்பாகக் கல்விப் பணி ஆற்றி நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொளகிறேன். 

நாட்டின் எதிர்கால தூண்களான மாணவச் செல்வங்களுக்கு கல்வியோடு ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியையும் கற்பித்து, அவர்களைத் தேசத்தின் விலை மதிப்பில்லாச் செல்வங்களாக உருவாக்கிடும் உயரிய பணியினை ஆற்றிடும் ஆசிரியர் பெருமக்களின் சேவை மென்மேலும் சிறக்க வேண்டுமென வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.