Showing posts with label TN Govt U Turn on October Salary G.O. 277. Show all posts
Showing posts with label TN Govt U Turn on October Salary G.O. 277. Show all posts

Wednesday, October 26, 2016

அரசு ஊழியருக்கான சம்பள அறிவிப்பை திரும்பப் பெற்றது ஏன்? டாக்டர் ராமதாஸ் கேள்வி

 
தீபாவளி திருநாளையொட்டி அரசு ஊழியர்களுக்கான அக்டோபர் மாத ஊதியம் 28ஆம் தேதி வழங்கப்படும் என அறிவித்த தமிழக அரசு, சிறிது நேரத்தில் அதை திரும்பப்பெற்றது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில்  தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டிற்கான தீபஒளி திருநாள் இம்மாத இறுதியில் 29-ஆம் தேதி வருவதால், அதைக் கொண்டாட வசதியாக இம்மாத ஊதியத்தை முன்கூட்டியே வழங்குமாறு தமிழ்நாடு அரசு ஊழியர் அமைப்புகள் பலவும் கோரிக்கை விடுத்திருந்தன. புதுச்சேரியில் தீபஒளி திருநாளையொட்டி நேற்றே ஊதியம் வழங்கப்பட்டதால் தமிழக அரசு ஊழியர்களிடையே இக்கோரிக்கை தீவிரமடைந்தது. இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உணர்ந்த தமிழக அரசு, அதன் ஊழியர்கள் அனைவருக்கும் அக்டோபர் மாத ஊதியம் நாளை மறுநாள் 28ம் தேதி வழங்கப்படும் என நேற்று மாலை ஆணை பிறப்பித்தது.

இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் அந்த அரசாணையை ரத்து செய்த அரசு, ஊழியர்களுக்கு நாளை மறுநாள் ஊதியம் வழங்கப்படாது; வழக்கம் போல மாதக் கடைசி நாளான 31ம் தேதி தான் ஊதியம் வழங்கப்படும் என்று புதிய அரசாணையை வெளியிட்டது. தமிழக அரசின் இந்தக் குளறுபடியால் அரசு பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தவறானதோ, நிறைவேற்றுவதற்கு சாத்தியமற்றதோ இல்லை. அண்டை மாநிலமான புதுச்சேரியில் அக்டோபர் ஊதியம் கடந்த 25ம் தேதி வழங்கப்பட்டு விட்டது. அவ்வாறு இருக்கும் போது தமிழகத்தில் இது ஏன் சாத்தியமில்லை என்பது தெரியவில்லை. ஒருவேளை சாத்தியமற்றதாக இருந்தால் கூட அதை சாத்தியமாக்குவது தான் நிர்வாகத்தின் பணியாக இருக்க வேண்டுமே தவிர, அறிவித்ததை திரும்பப்பெறுவது அழகல்ல.

மேலும் அவரது அறிக்கையில், 

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, நிலுவைத் தொகை ஒரே தவணையில் வழங்கப்பட்டு விட்டது. ஆனால், தமிழகத்தில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 
 
அதுமட்டுமின்றி, மத்திய அரசு ஊழியருக்கு கடந்த ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வும் வழங்கப்படாதது செய்யாத தவறுக்கு கிடைத்த இரட்டை தண்டனையாகும். 
 
எனவே, அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான அக்டோபர் ஊதியத்தை நாளை மறுநாள் வழங்க அரசு முன்வர வேண்டும். 
 
அதுமட்டுமின்றி, 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரை, அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என  அறிக்கை வெளியிட்டுள்ளார்.