Showing posts with label TN Govt Announces Bonus for Public Sector Employees. Show all posts
Showing posts with label TN Govt Announces Bonus for Public Sector Employees. Show all posts

Thursday, September 29, 2016

பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


இதன்படி,

1. லாபம் ஈட்டியுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத்தொகை என மொத்தம் 20% வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

2. நட்டம் அடைந்துள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33% குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67% கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

3. தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத்தொகை என மொத்தம் 20% போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

4. லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை என மொத்தம் 20%  வரையிலும் ஒதுக்கக்கூடிய உபரி தொகைக்கு ஏற்ப வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33% குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை வழங்கப்படும்.

5. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

6. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் வழங்கப்படும்.

7. அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு, அந்த நிறுவனங்களின் லாப நட்டத்திற்கு ஏற்ப ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கருத்தில் கொண்டு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத்தொகைக்கு மிகாமலோ அல்லது 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத்தொகையோ வழங்கப்படும்.

8. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.

9. ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20% போனஸ் மற்றும் கருணைத் தொகைக்கு மிகாமல் வழங்கப்படும். ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணைத் தொகை என 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.

10. இது தவிர தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 4,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்த பட்சம் 8400 ரூபாய் அதிகபட்சம் 16800 ரூபாய் பெறுவர். தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 67ஆயிரத்து 887 தொழிலாளர்களுக்கு ரூ.476 கோடியே 71 லட்சம் போனஸாக வழங்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.