Showing posts with label Safety Plans for School Children's in Rainy Days. Show all posts
Showing posts with label Safety Plans for School Children's in Rainy Days. Show all posts

Sunday, November 15, 2015

மழைக்காலங்களில் மாணவர்களைப் பாதுகாக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அவர்களின் சுற்றறிக்கை

 
மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அவர்கள்  அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:


  1.  நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் மாணவர்கள் ஆறு, ஏரி, குளங்களுக்கு வேடிக்கை பார்க்கச் செல்ல வேண்டாம். 

  2.  தொடர் மழையின் காரணமாக பள்ளியில் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தூரத்துக்கு மாணவர்கள் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும். 

  3.  மழை காரணமாக சில வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்தகைய அறைகளை பயன்படுத்தக் கூடாது. அவற்றை பூட்டிவைக்க வேண்டும்.

  4. மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா, மின்கசிவு, மின்கோளாறு ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வுசெய்ய வேண்டும். தேவைப்பட்டால் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்துக்கொள்ளலாம். அத்துடன் மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டு மின் கோளாறுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

  5. பள்ளி வளாகத்தில் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தால், அவை மூடப்பட்ட நிலையில் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

  6. மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். விடுமுறை காலங்களில் நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க செல்லக் கூடாது. இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

  7. மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்போதும், திரும்பும்போதும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் வழியை தவிர்க்க வேண்டும்.

  8. சாலையில் செல்லும்போது பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடுவதோ அல்லது அருகே செல்வதோ கூடாது. மாணவர்கள் சாலையில் மழைநீர் கால்வாய்கள் இருக்கும் இடங்கள் வழியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

  9. பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும்.

  10. சுவிட்சுகள் சரியாக உள்ளனவா, மழைநீர் படாத வண்ணம் இருக்கின்றனவா என்பதை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

  11. மாணவர்களைக் கொண்டு மின்சாதனங்களை இயக்கக் கூடாது.

  12. பள்ளியில் உள்ள கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். மேற்கூரையில் மழைநீர் தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

  13. பள்ளி வளாகத்தில் கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். பள்ளங்களைச் சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  14. மழையில் இருந்து காத்துக்கொள்ள மரங்களின் கீழ் ஒதுங்கக் கூடாது என்றும் அவ்வாறு ஒதுங்கினால் இடி, மின்னலால் ஆபத்து நேரிடக்கூடும் என்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

  15. பருவகால மாற்றங்களால் ஏற்படக்கூடிய டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள மாணவர்களுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.