Showing posts with label 7th Pay Commission team for TN Govt Employees. Show all posts
Showing posts with label 7th Pay Commission team for TN Govt Employees. Show all posts

Thursday, February 23, 2017

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த ஐவர் குழு- 30.06.2017க்குள் அறிக்கை அளிக்க உத்தரவு: தமிழக முதல்வர்

மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி,  தமிழக அரசு ஊழியர்களின்  ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க  5 பேர் கொண்ட  அலுவலர் குழு ஒன்றை உடனடியாக அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

மேலும், இந்த அலுவலர் குழு தமது அறிக்கையை 30.06.2017க்குள்  அரசுக்கு அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

இக்குழுவில் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை செயலாளர், உறுப்பினர் செயலாளர் உமாநாத் ஆகியோர் இடம்பெறுவர்

இந்த 'அலுவலர் குழு' மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இக்குழு, இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்கும்.
அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம் / ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.